விழுப்புரத்தில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்


விழுப்புரத்தில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 23 May 2020 4:48 AM GMT (Updated: 23 May 2020 4:48 AM GMT)

விழுப்புரம் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மதியத்திற்கு பிறகு பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு நகராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

 விழுப்புரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் துப்புரவு மேலாளர் சேகர் நேற்று காலை துப்புரவு பணியை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

 அப்போது நகராட்சி துப்புரவு ஆய்வாளர் தின்னையாமூர்த்தி என்பவர் சேகரை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சேகருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவத்தை கண்டித்தும், துப்புரவு ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று மதியத்திற்கு பிறகு ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் அனைவரும் பணிக்கு செல்லாமல் திடீரென பணியை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட சில பகுதிகளிலும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.  

மேலும் துப்புரவு பணியாளர்கள், நேற்று மாலை விழுப்புரம் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

 அப்போது இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்துவதாக அவர் கூறியதன்பேரில் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story