ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா கொல்கத்தாவில் இருந்து வந்தவர்கள்


ராமநாதபுரம் மாவட்டத்தில்  ஒரே கிராமத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா   கொல்கத்தாவில் இருந்து வந்தவர்கள்
x
தினத்தந்தி 23 May 2020 5:53 AM GMT (Updated: 23 May 2020 5:53 AM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55-ஆக உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே இதுவரை 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 21 பேர் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் இறந்துவிட்ட நிலையில் மீதம் உள்ளவர்களில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 13 பேரும், பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 11 பேரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று முதுகுளத்தூர் அருகே உள்ள மணலூர் பகுதியை சேர்ந்த ஒன்றரை வயது சிறுவன், 3 வயது சிறுமி மற்றும் 2 பெண்கள் உள்பட 9 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர்கள் 9 பேரையும் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்க்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்கள் 9 பேரும் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா பகுதியில் இருந்து ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த 14-ந்தேதி வந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் முதுகுளத்தூர் அரசு கலைக்கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55-ஆக உயர்ந்துள்ளது.

3 பேர்

மேலும் முகாம்களில் தங்கி உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 450 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் நோய்த்தொற்று எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். எனவே மாவட்டத்தில் 29 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story