ஈரோடு மாவட்டம் முழுவதும் வெறிச்சோடிய மதுக்கடைகள்
தமிழ்நாட்டில் கடந்த 16-ந்தேதிக்கு பின்னர் மதுக்கடைகள் தடையின்றி திறக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது. முதல் 3 நாட்கள் வரை மதுக்கடைகளில் கூட்டம் கட்டுப்படாத அளவுக்கு இருந்தன.
ஈரோடு,
குடிமகன்களுக்கு டோக்கன் கொடுக்கவும், குடைகள் வழங்கவும் டாஸ்மாக் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்களை வரிசைப்படுத்தவும், எச்சரிக்கை செய்யவும் போலீசார் பணியில் இருந்தனர். ஆனால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறையத்தொடங்கியது.
நேற்று ஈரோட்டில் பல கடைகளும் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. அவ்வப்போது யாராவது வந்து மது வாங்கிச்சென்றனர். குடை, டோக்கன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் இன்றி மதுவகைகள் விற்பனை செய்யப்பட்டன.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, பல நாட்களாக மதுக்கடைகள் திறக்கப்படாததால் ஏராளமானவர்கள் முதலில் வந்து குவிந்தனர். 40 நாட்களுக்கும் மேலாக மது குடிக்காமல், அதை விட்டு விட்ட பலரும் தற்போது மதுவின் மீது ஆர்வம் காட்டவில்லை.
பல குடும்பத்தில் மதுக்குடிக்காத கணவர்களால் மகிழ்ச்சி கிடைத்து இருக்கிறது. இதுவரை போதையிலேயே குடும்பத்தை பார்த்துக்கொண்டு இருந்த குடும்ப தலைவர்களும், குடிபோதையின்றி இருந்தபோது குடும்பங்களின் உண்மையான மகிழ்ச்சியை பார்த்து மனம் மாறி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தற்போது பொருளாதார சிக்கல் கடுமையாக இருக்கிறது.
கடன் வாங்கவோ, கொடுக்கவோ பொருளாதார சூழல் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் கிடைக்கும் வேலைகளுக்கு இப்போதுதான் செல்லத்தொடங்கி இருக்கிறார்கள். சனிக்கிழமை (இன்று) சம்பள நாள் என்பதால் மாலையில் பலர் வர வாய்ப்பு உள்ளது.
இதுபோல் ஞாயிற்றுக்கிழமை (நாளை)யும் சற்று கூட்டம் எதிர்பார்க்கலாம். மாவட்ட அளவில் இதுபோன்று அனைத்து கடைகளிலும் விற்பனை சரிந்து இருப்பதாக தெரிகிறது என்றார்.
Related Tags :
Next Story