35 நாட்களுக்கு பிறகு ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா


35 நாட்களுக்கு பிறகு ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 May 2020 6:38 AM GMT (Updated: 23 May 2020 6:38 AM GMT)

35 நாட்களுக்கு பிறகு ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த ‘பாஸ்ட் புட்’ கடை தொழிலாளி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு, 

 கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய நேரத்திலேயே ஈரோடு மாவட்டம் தமிழ்நாட்டிலேயே முதல் முதலாக சிவப்பு மண்டலமாக மாறியது. பின்னர் ஈரோடு மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவரின் அர்ப்பணிப்பு பணியால் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. 

ஈரோடு மாவட்டத்தில் 70 பேர் வரை வேகமாக பரவியது. பின்னர் அது கட்டுப்படுத்தப்பட்டது. ஒருவர் மட்டும் உயிரிழந்து விட, 69 பேர் முழுமையாக குணம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். அதைத்தொடர்ந்து கடந்த 35 நாட்களாக கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்படாத நிலையில் ஈரோடு மாவட்டம் இருந்தது. 

இது ஈரோடு மாவட்டத்துக்கு மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவில் பெருமையை தேடித்தந்தது. மத்திய அரசின் பாராட்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவனுக்கு கிடைத்தது. தற்போது ஈரோடு மாவட்டம் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளது. 

இந்த நிலையில் ஈரோடு மக்களுக்கு பேரிடியாக, புதிதாக ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. கவுந்தப்பாடி திருவள்ளுவர்நகரை சேர்ந்த அந்த நபர் 50 வயதை கடந்தவர் ஆவார். சமீபத்தில் சென்னையில் இருந்து வந்தபோது தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். 

பின்னர் கவுந்தப்பாடியில் ஈரோடு ரோட்டில் உள்ள ஒரு பாஸ்ட் புட் கடையில் வேலை செய்து வந்தவர். சமீபத்தில் காலில் காயம் ஏற்பட்டு அதற்கு வைத்தியம் பார்க்க சில இடங்களுக்கு சென்று உள்ளார். அங்கு அது சரியாகாததால் கடந்த 3 நாட்களுக்கு முன் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. 

உடனடியாக அவர் சேலம் கொரோனா சிறப்பு மருத்துவப்பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரும் சேலத்திலேயே இருந்ததால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த தகவல் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறும்போது, ‘கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நபர் வசித்த பகுதி முற்றிலும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும், அவர் எங்கெங்கு சென்று வந்தார். அவருடன் நெருங்கிய பழக்கம் உள்ளவர்கள் யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது‘ என்றார்.  

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் கூறும்போது, ‘கொரோனா பாதித்த நபர் சென்னையில் இருந்து வந்தவர். அவர் தற்போது சேலத்தில் தான் இருக்கிறார். அவர் கவுந்தப்பாடியில் வசித்த வீதி முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது‘ என்றார்.

Next Story