தாம்பரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: நோய் பரவலை கட்டுப்படுத்த முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனருக்கு சிறப்பு அதிகாரி எச்சரிக்கை


தாம்பரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: நோய் பரவலை கட்டுப்படுத்த முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனருக்கு சிறப்பு அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 May 2020 3:30 AM IST (Updated: 24 May 2020 12:45 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட பொது சுகாதார துறை துணை இயக்குனருக்கு சிறப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரத்தில், செங்கல்பட்டு மாவட்ட பொது சுகாதாரத்துறையின் மெத்தனத்தால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல் 30-ந் தேதி வரை 4 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதன்பிறகு மளமளவென உயர்ந்து நேற்று 60 ஐ தொட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனருக்கும், புறநகர் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கும் இடையே நிலவும் பனிப்போரே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் உரிய நேரத்தில் அனுப்பாமல் தாமதம் செய்வது, வைரஸ் அறிகுறி இருப்பவர்களை நன்றாக இருப்பதாக கூறி மீண்டும் வீட்டுக்கு அனுப்பி தங்களை தனிமைப்படுத்தி கொள்ள கூறியதால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே சுற்றித்திரிந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாம்பரம், பல்லாவரம் தாலுகாக்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது.

இந்தநிலையில் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் முதன்மைச் செயலாளரும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் கொரோனா ஒழிப்பு பணிகள் கண்காணிப்பு அலுவலருமான உதயசந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து பேசப்பட்டது. அப்போது நோய் பரவல் கட்டுப்படுத்த முறையாக நடவடிக்கைகள் எடுக்காமல் அலட்சியம் செய்தது குறித்து செங்கல்பட்டு மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனரை உதயசந்திரன் கடுமையாக எச்சரித்தார்.

இனிமேல் செங்கல்பட்டு மாவட்ட பொது சுகாதாரத்துறையினர் நோய் பரவல் கட்டுப்படுத்த அலட்சியம் செய்து வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் இனி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது. அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story