மாங்காடு அருகே பழைய இரும்பு பொருள் குடோனில் தீ விபத்து சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு


மாங்காடு அருகே பழைய இரும்பு பொருள் குடோனில் தீ விபத்து சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 May 2020 3:00 AM IST (Updated: 24 May 2020 12:54 AM IST)
t-max-icont-min-icon

மாங்காடு அருகே பழைய இரும்பு பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பூந்தமல்லி,

மாங்காடு அருகே பழைய இரும்பு பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாங்காடு அடுத்த சிக்கராயபுரம், சிவன் தாங்கல், கல்குவாரியை ஒட்டி முகமது ஜஹாங்கீர் என்பவர் பழைய இரும்பு பொருட்கள் குடோன் நடத்தி வந்தார். இங்கு தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கப்படும் பழைய இரும்புகள், ரப்பர்கள், அலுமினியம், நார்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டு, பின்னர் அதனை தரம்பிரித்து ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

வடமாநில தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கி இந்த வேலையை செய்து வந்தனர். நேற்று அதிகாலை இந்த குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் குடோன் முழுவதும் தீ பரவியது. குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், ரப்பர்கள், நார்கள் கொழுந்துவிட்டு எரிந்தது.

அங்குள்ள அறையில் தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்கள் அலறி அடித்து வெளியே ஓடிவந்து உயிர் தப்பினர். தீயின் வெப்பம் தாங்காமல் வடமாநில தொழிலாளர்கள் சமைத்து சாப்பிடுவதற்காக அங்கு வாங்கி வைத்து இருந்த 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதுபற்றி தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் குடோனில் இருந்த பழைய பொருட்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின.

சேதமான பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story