காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம்


காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 24 May 2020 3:15 AM IST (Updated: 24 May 2020 1:24 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடந்தது.

காஞ்சீபுரம்,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் மாவட்டம் முழுவதும் 4-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பெற தகுந்த ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பிற இடங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட பாதிப்புக்குள்ளான இடங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் காஞ்சீபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர்களான தமிழ்நாடு மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலர் சுப்பிரமணியன், மற்றும் தமிழ்நாடு கடலோர காவல்படை காவல்துறை துணைத்தலைவர் பவானீஸ்வரி ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான வார்டு 35, கோட்டாராம்பாளையம் தெருவில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தவிர்த்திடும் பொருட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை காஞ்சீபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர்களான தமிழ்நாடு மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலர் சுப்பிரமணியன், மற்றும் தமிழ்நாடு கடலோர காவல்படை காவல்துறை துணைத்தலைவர் பவானீஸ்வரி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அந்த பகுதி பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைத்திட மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதிகளை பார்வையிட்டு சுகாதார பணிகளை ஆய்வு செய்து மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான தடுப்பு உபகரணங்கள் இருக்கிறதா? என கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காஞ்சீபுரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான சுகாதாரப்பணிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் இருப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வையாவூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தை மற்றும் மளிகை பொருட்கள் பல்பொருள் அங்காடியை பார்வையிட்டு பொதுமக்கள் முக கவசத்துடன் சமூக இடைவெளி கடைபிடித்து பொருட்கள் வாங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை காஞ்சீபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர்கள் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் பொன்னையா, காவல்துறை சரக துணைத்தலைவர் தேன்மொழி, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, நகராட்சி என்ஜீனியர் மகேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story