நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஆட்டோக்கள் ஓடத்தொடங்கின குறைந்தபட்சம் 2 பேரை ஏற்றிச்செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஆட்டோக்கள் ஓடத்தொடங்கின குறைந்தபட்சம் 2 பேரை ஏற்றிச்செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை
x
தினத்தந்தி 23 May 2020 9:54 PM GMT (Updated: 23 May 2020 9:54 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று ஆட்டோக்கள் ஓடத் தொடங்கின. குறைந்தபட்சம் 2 பேரை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை, 

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று ஆட்டோக்கள் ஓடத் தொடங்கின. குறைந்தபட்சம் 2 பேரை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின் போது ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதில் சமீபத்தில் வாடகை கார்கள் அரசு நிபந்தனைகளின்படி குறிப்பிட்ட சமூக இடைவெளியுடன் பயணிகளை அழைத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஆட்டோ டிரைவர்கள் தங்களுக்கும் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும், கொரோனா கால நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினார்கள். இதையடுத்து தமிழக அரசு ஒரு பயணியை மட்டும் அழைத்து செல்லும் வகையில் ஆட்டோக்களை இயக்கிக் கொள்ள அனுமதி அளித்தது.

ஆட்டோக்கள் மீண்டும் இயங்கின

இதையடுத்து நேற்று ஆட்டோக்கள் மீண்டும் இயங்கின. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆட்டோக்களுக்கு பூஜை போட்டு இயக்கினார்கள்.

ஆனால், ஆட்டோ டிரைவர்கள் தங்களுக்கு வந்த அழைப்பின்பேரில் மட்டுமே இயக்கினார்கள். ஸ்டாண்டுகளில் ஆட்டோக்களை நிறுத்த அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், பொதுமக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதால் ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்படவில்லை. ஒரு சில ஆட்டோக்கள் ஒரேயொரு பயணியுடன் சென்று வந்தன. நோயாளிகளை அழைத்து சென்ற ஆட்டோக்களில் மட்டும் கூடுதல் பயணிகளை அழைத்து செல்ல அனுமதிக்கப்பட்டது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் முருகன் கூறுகையில், “ஆட்டோக்களை இயக்க அனுமதி கொடுத்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அதே நேரத்தில் ஒரு ஆட்டோவில் ஒரு பயணி என்பது, ஒரு குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி 2 பேர் 2 ஆட்டோக்களில் பயணம் செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்தும். இது அவர்களுக்கு பொருளாதார சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, குறைந்தபட்சம் 2 பேரை ஏற்றிச்செல்ல அனுமதி அளிக்க வேண்டும்“‘ என்றார்.

தூத்துக்குடி-தென்காசி

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 7,500 ஆட்டோக்கள் உள்ளன. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று ஆட்டோக்கள் மீண்டும் இயங்கின. இதையொட்டி அனைத்து ஆட்டோக்களிலும் டிரைவர்கள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். ஆட்டோ ஸ்டாண்டுகளில் இடைவெளி விட்டு, ஆட்டோக்களை நிறுத்தினர். ஆட்டோ டிரைவர்கள் முககவசம் அணிந்து இருந்தனர். பெரும்பாலான ஆட்டோக்களில் கைகழுவும் திரவமும் வைத்து இருந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்பதால் இதில் 10 சதவீத ஆட்டோக்களே ஓடின. இதுகுறித்து டிரைவர் சங்கர் கூறுகையில், “ஒரு பயணி மட்டும் பயணிக்க செய்து ஆட்டோ ஓட்டுவது கடினமான நிலை. பஸ்கள் வழக்கம்போல் இயங்கினால் மட்டுமே ஆட்டோக்களில் பொதுமக்கள் ஏறுவார்கள். காலையில் இருந்து மதியம் வரை சவாரிக்கு நின்றேன். ஆனால், பயணிகள் யாரும் வரவில்லை. இதனால் வீட்டுக்கு சென்று விட்டேன்” என்று வேதனையுடன் கூறினார்.

Next Story