ஊரடங்கால் 36 சதவீதம் குறைந்திருந்தது பெங்களூருவில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு


ஊரடங்கால் 36 சதவீதம் குறைந்திருந்தது பெங்களூருவில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு
x
தினத்தந்தி 24 May 2020 3:29 AM IST (Updated: 24 May 2020 3:29 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஊரடங்கால் 36 சதவீதம் காற்று மாசு குறைந்திருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கப்பட்டு உள்ளதால் மீண்டும் காற்று மாசு அதிகரித்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு நகரில் அரசு பஸ், இருசக்கர வாகனங்கள் உள்பட ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் வலம் வருகின்றன. இதன் காரணமாக பெங்களூரு நகரில் காற்று மாசு அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் இருந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாட்டில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கால் பெங்களூருவில் 50 நாட்களுக்கும் மேலாக பஸ், ஆட்டோக்கள், கார்கள், பிற வாகனங்கள் ஓடுவது நிறுத்தப்பட்டது.

இதனால் ஊரடங்கு காலத்தில் பெங்களூரு நகரில் ஒட்டு மொத்தமாக 36 சதவீதம் காற்று மாசுபடுவது குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததால் காற்று மாசு ஏற்படுவதும் குறைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு பஸ்கள், ஆட்டோக்கள் ஓடுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டாலும், சொந்த வாகனங்களை பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

அதன்படி, பெங்களூரு சிட்டி ரெயில் நிலைய பகுதியில் ஊரடங்கு முன்பாக 115 சதவீதம் காற்று மாசுப்பட்டு இருந்ததும், ஊரடங்கின் போது அப்பகுதியில் 59 சதவீதமும், தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட பின்பு காற்று மாசுவின் அளவு 96 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நகரின் ஒவ்வொரு பகுதிகளிலும் நடத்தப்பட்ட ஆய்வின் போது ஊரடங்கு தளர்வால் காற்று மாசு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. வாகனங்களின் ஓட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதே காற்று மாசு ஏற்பட முக்கிய காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story