கோவில்பட்டியில் தனிமை பகுதியில் இருந்து வெளியேறி பொதுமக்கள் போராட்டம் அத்தியாவசிய பொருட்கள் வழங்க கோரிக்கை
கோவில்பட்டியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கக்கோரி, தனிமை பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கக்கோரி, தனிமை பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
பொதுமக்கள் போராட்டம்
கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்த நகரசபை தூய்மை பெண் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவருடைய பேத்தி மற்றும் அவருடைய கணவர், 5 மாத குழந்தை ஆகியோரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து கோவில்பட்டி ஸ்டாலின் காலனியை தனிமைப்படுத்தி, சுகாதார துறையினர் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். அங்கு வெளிநபர்கள் யாரும் நுழையாத வகையில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் போதிய அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று அங்குள்ள தடுப்புகளை அகற்றி, வெளியில் வந்து திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
உடனே நகரசபை சுகாதார அலுவலர் இளங்கோ, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனிமை பகுதியில் வசிப்பவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் வீடு தேடிச் சென்று நிவாரண பொருட் களை வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story