பெங்களூருவில் சாம்ராஜ்பேட்டை போலீஸ்காரருக்கு கொரோனா பாதிப்பு 30 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர்


பெங்களூருவில் சாம்ராஜ்பேட்டை போலீஸ்காரருக்கு கொரோனா பாதிப்பு 30 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 23 May 2020 10:30 PM GMT (Updated: 23 May 2020 10:14 PM GMT)

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை போலீஸ்காரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை போலீஸ்காரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த 30 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு புலிகேசிநகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றியவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அதைத்தொடர்ந்து, அந்த போலீஸ்காரருடன் தொடர்பில் இருந்த இன்ஸ்பெக்டர் உள்பட 30 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், பெங்களூருவில் மற்றொரு போலீஸ்காரருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

அதாவது சாம்ராஜ்பேட்டை போலீஸ் நிலையத்தில் 35 வயதான போலீஸ்காரர் பணியாற்றுகிறார். போலீசார் கண்டிப்பாக கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதால், சி.வி.ராமன்நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதியாகி இருக்கிறது. அந்த போலீஸ்காரர் மகாலட்சுமி லே-அவுட்டில் வசித்து வருகிறார்.

மேலும் கொரோனா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள திப்புநகரில் அவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அங்கு வசிப்பவர்கள் மூலமாக அந்த போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், போலீஸ்காரருடன் தொடர்பில் இருந்ததாக சாம்ராஜ்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் உள்பட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்ற பீதியில் உள்ளனர்.

இதற்கிடையில், போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், சாம்ராஜ்பேட்டை போலீஸ் நிலையம் முழுவதும் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. தேவைப்பட்டால் சாம்ராஜ்பேட்டை போலீஸ் நிலையம் சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story