சீசன் தொடங்கும் அறிகுறி: குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படுமா? சுற்றுலா பயணிகள் - வியாபாரிகள் எதிர்பார்ப்பு


சீசன் தொடங்கும் அறிகுறி: குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படுமா? சுற்றுலா பயணிகள் - வியாபாரிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 24 May 2020 3:50 AM IST (Updated: 24 May 2020 3:50 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் சீசன் தொடங்கும் அறிகுறி தென்படுவதால், அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தென்காசி, 

குற்றாலத்தில் சீசன் தொடங்கும் அறிகுறி தென்படுவதால், அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

குற்றால அருவிகள்

இயற்கை எழில் சூழ்ந்த குற்றாலத்தின் சிறப்புகள் குறித்து திருக்குற்றால குறவஞ்சி என்ற சிற்றிலக்கியத்தில் விளக்கி கூறப்பட்டுள்ளது. மேலும் எண்ணற்ற இலக்கியங்களிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலம், ‘தென்னகத்தின் ஸ்பா’ என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கியவுடன், குற்றாலத்தில் சாரல் மழை பொழிந்து, சீசன் தொடங்கும்.

அங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். மலையில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளை தழுவி, அருவிகளாக விழும் தண்ணீரில் குளிப்பதால், உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், உள்ளத்துக்கு எல்லையற்ற ஆனந்தத்தையும் தருகிறது. குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் மக்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்வர். மேலும் அங்குள்ள செண்பகாதேவி அருவி, பாலருவி உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும்.

படகு சவாரி

ஆண்டு முழுவதும் கோடையில் உழைத்து களைத்த மக்கள், இந்த குளுமையான சீசனை அனுபவிப்பதற்காகவும், அருவிகளில் குளித்து மகிழ்வதற்காகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் குற்றாலத்துக்கு குடும்பத்துடன் வருவார்கள். அங்குள்ள மெயின் அருவி கரையில் உள்ள குற்றாலநாத சுவாமியையும் தரிசிப்பார்கள்.

தொடர்ந்து ஜூலை, ஆகஸ்டு மாதங்களிலும் குற்றாலத்தில் சீசன் ரம்மியமாக இருக்கும். குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் காலத்தில் அரசு சார்பில், சாரல் விழா நடத்தப்படும். மேலும், குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்கு செல்லும் வழியில் வெண்ணமடை குளத்தில் தண்ணீர் நிரம்பியவுடன், சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், அங்கு படகு சவாரியும் நடத்தப்படும்.

வெறிச்சோடிய கடைகள்

குற்றாலத்தில் சீசன் களைகட்டியதும், அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டும். அனைத்து தங்கும் விடுதிகளிலும் சுற்றுலா பயணிகள் தங்கி, அருவிகளில் குளித்து மகிழ்வர். சீசன் காலத்தில் ஏராளமான தற்காலிக கடைகளில் பழ வியாபாரமும் மும்முரமாக நடைபெறும். வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று, அருவிகளில் ஆனந்தமாக நீராடுவார்கள்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்குள்ள கடைகளும் திறக்கப்படாததால் வெறிச்சோடி கிடக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சீசன் தொடங்கும் அறிகுறி

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கும் அறிகுறி தென்படுகிறது. இதனால் குற்றாலத்தில் அவ்வப்போது குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்கிறது. சிறிதுநேரம் வெயில் அடிக்கிறது. மெயின் அருவி, ஐந்தருவியில் குறைவான அளவு தண்ணீர் விழுகிறது. எனவே, விரைவில் சீசன் தொடங்கும் நேரத்தில், குற்றாலத்தில் உள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதேபோன்று குற்றாலத்தில் சீசன் தொடங்கியவுடன், அங்கு கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து குற்றாலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் கூறியதாவது:-

சமூக இடைவெளியை கடைபிடித்து...

கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியவுடன் குற்றாலத்தில் சீசன் தொடங்கி, அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களில்தான் சீசன் அருமையாக இருக்கும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சீசன் தொடங்கிய சில நாட்களிலேயே அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால், சாரல் விழாவும் நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால், வியாபாரிகளுக்கு போதிய வருமானமும் கிடைக்கவில்லை.

தற்போது இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால், அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, குற்றாலத்தில் விரைவில் சீசன் தொடங்க உள்ள நிலையில், அருவிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து குளிப்பதற்கும், கடைகளை சுகாதாரமான முறையில் திறந்து நடத்துவதற்கும் அரசு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story