மாவட்ட செய்திகள்

பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய கோரி கடிதம்:மந்திரிக்கு கவர்னர் கடும் எதிர்ப்பு + "||" + Letter requesting cancellation of semester exams Governor's strong opposition to the minister

பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய கோரி கடிதம்:மந்திரிக்கு கவர்னர் கடும் எதிர்ப்பு

பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய கோரி கடிதம்:மந்திரிக்கு கவர்னர் கடும் எதிர்ப்பு
மராட்டியத்தில் பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய கோரி பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு (யு.ஜி.சி.) மந்திரி உதய் சாமந்த் கடிதம் எழுதியதற்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, தர நிர்ணய அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும்படி பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு (யு.ஜி.சி.) மாநில உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை மந்திரி உதய் சாமந்த் கடிதம் எழுதி உள்ளார்.


இதற்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய யு.ஜி.சி.க்கு மந்திரி உதய் சாமந்த் கடிதம் எழுதியிருப்பது தேவையற்ற தலையீடு ஆகும்.

இது யு.ஜி.சி. வழிகாட்டுதல்களையும், மராட்டிய பொது பல்கலைக்கழக சட்டம் 2016-யையும் மீறுவதாகும். சட்ட விதிகளின்படி பல்கலைக்கழகங்களுக்கு பரீட்சைகளை நடத்துவதற்கும், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதற்கும் அதிகாரம் உள்ளது.

பரீட்சை நடத்தாமல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவது நெறிமுறையற்றது. பொருத்தமானதும் அல்ல. இது பல்கலைக்கழக சட்டவிதிகளை மீறுவதாகும்.

தேர்வுகளை எழுதாமல் மாணவர்கள் பட்டம் பெறுவது அவர்களின் உயர்படிப்பு தரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மத்திய உள்துறை அமைச்சகம் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதற்கு மாநில கல்வி வாரியங்கள், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. போர்டுகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்து உள்ளது. பல்கலைக்கழக தேர்வு தொடர்பாக யு.ஜி.சி. வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.