மராட்டியத்தில் ஊரடங்கு முடியும் வரை விமான சேவைக்கு அனுமதி கிடையாது மாநில அரசு அறிவிப்பு


மராட்டியத்தில் ஊரடங்கு முடியும் வரை விமான சேவைக்கு அனுமதி கிடையாது மாநில அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 24 May 2020 5:45 AM IST (Updated: 24 May 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் 4-ம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது.

மும்பை,

கொரோனா நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் 4-ம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர பஸ், ரெயில், விமானம் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

பின்னர் அவ்வப்போது ஊரடங்கு தொடர்பாக பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. விமான போக்குவரத்தை பொறுத்தமட்டில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்டு வருவதற்காக மட்டும் சில விமானங்கள் இயக்கப்பட்டன.

4-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதி முடிவடைய இருக்கிறது. அதன்பின்னர் தான் விமான போக்குவரத்து தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால் 25-ந் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

தற்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு வசதியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், மராட்டியத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடர்பாக ஊரடங்கில் எந்த விதிமுறைகளும் தளர்த்தப்படவில்லை. எனவே ஊரடங்கு முடியும் வரை இங்கு விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி கிடையாது என மராட்டிய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story