ரவுண்டானாவில் இருந்து செல்லும் வகையில் மேட்டூர் ரோடு ஒரு வழிப்பாதையாக மாற்றம் பொதுமக்கள் வரவேற்பு
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் இருந்து செல்லும் வகையில் மேட்டூர் ரோடு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் இருந்து செல்லும் வகையில் மேட்டூர் ரோடு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
மேட்டூர் ரோடு
ஈரோடு மாநகராட்சியில் மிகவும் நெரிசலான சாலையாக இருப்பது மேட்டூர் ரோடு. அரசு ஆஸ்பத்திரி, பஸ் நிலையம், சுவஸ்திக் கார்னர் என்று முக்கிய பகுதிகளுக்கு இணைப்பு சாலையாக இருப்பதால் இங்கு எப்போதும் போக்குவரத்துக்கு குறைவு இல்லை என்ற நிலையே இருக்கும். இந்த ரோட்டை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. பல முறை ஒரு வழிப்பாதை பரீட்சார்த்த முறைகள் மேற்கொண்டாலும் அவை தோல்வியிலேயே முடிந்து இருக்கின்றன.
ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு முடியவடையும் நிலையில் மேட்டூர் ரோடு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் ஆலோசனையின் பேரில் போக்குவரத்து துணை போலீஸ் சூப்பிரண்டு எட்டியப்பன், இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர்.
ரவுண்டானா
அதன்படி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், அதாவது பெருந்துறை ரோடு, ஈ.வி.என்.ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா பகுதி, நசியனூர் ரோடு ஆகியவற்றில் இருந்து வரும் வாகனங்கள் மேட்டூர் ரோட்டுக்கு செல்லலாம். மேட்டூர் ரோட்டில் இருந்து ரவுண்டானாவுக்கு வாகனங்கள் வர முடியாது.
இதுபோல் கல்யாண் சில்க்ஸ் அருகே உள்ள ரோடு, அபிராமி தியேட்டர் எதிரில் உள்ள ரோடுகள் என்று அனைத்து சாலைகளில் இருந்து வரும் வாகனங்களும் வலது பக்கமாக திரும்பி சுவஸ்திக் கார்னர் நோக்கியே செல்ல முடியும். முனிசிபல் காலனியில் இருந்து வரும் வாகனங்கள் இடது பக்கமாக திரும்பி சுவஸ்திக் கார்னர் நோக்கி செல்ல முடியும். சுவஸ்திக் கார்னர் பகுதியில் நேராக வ.உ.சி.பூங்கா ரோட்டுக்கு செல்ல முடியாது. சத்தி ரோட்டில் இடது பக்கமாக திரும்பி, அருகில் உள்ள யூ டர்னில் வலது பக்கமாக திரும்பிதான் செல்ல வேண்டும்.
ஒரு வழிப்பாதை
அதுபோல் சத்தி ரோடு மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து வெளி வரும் பஸ்கள் மேட்டூர் ரோட்டில் திரும்பி வர முடியாது. நாச்சியப்பா வீதி வழியாக சவீதா சந்திப்புக்கு செல்லலாம். இடைப்பட்ட அகில் மேடு வீதி சாலைகள் மூலமாக மேட்டூர் ரோட்டுக்கு வர முடியும். பரீட்சார்த்த முறையில் இந்த ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் கூறும்போது, ‘ஈரோட்டில் முதல் கட்டமாக மேட்டூர் ரோடு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக நன்கு ஆலோசனை செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கடைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் பார்க்கிங் வசதிகள் ஆங்காங்கே நல்ல முறையில் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் எந்த பாதிப்பும் இருக்காது’ என்றார்.
போக்குவரத்து நெரிசல்
ஒரு வழிப்பாதை நடைமுறைக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்து உள்ளனர். இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ‘மேட்டூர் ரோடு ஒரு வழிப்பாதையாக்கப்பட்டு இருப்பது சிறந்த முடிவு. கொரோனாவுக்கு பின்னர் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இது உதவும். தற்போது மேட்டூர் ரோட்டில் மிக வேகமாக செல்ல முடியவில்லை என்றாலும், எங்கும் தேக்கம் இன்றி வாகனங்கள் செல்ல முடிகிறது.
இன்னும் பொதுமக்கள் பழகும்போது இது எளிதாகி விடும். இதை மாதிரியாக கொண்டு காந்திஜி ரோடு, நேதாஜி ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு வழிப்பாதையை மேம்படுத்த வேண்டும். இதுபோல், பெருந்துறை ரோட்டில் இருந்து வரும் பன்னீர்செல்வம் பூங்கா செல்லும் வாகனங்கள் மேம்பாலத்திலேயே செல்லும் வகையில் ரவுண்டானா பகுதியில் தடுப்பு வேலி வைக்கப்பட்டால் மேம்பாலம் முழுமையான பயன்பாட்டுக்கு வருவதுடன் ரவுண்டானா பகுதியில் நெரிசல் குறையும்’ என்றார்.
Related Tags :
Next Story