60 நாட்களுக்கு பிறகு டிரைவர்கள் மகிழ்ச்சி: குமரியில் ஆட்டோக்கள் ஓட தொடங்கியது விதிமுறையை தளர்த்த கோரிக்கை
60 நாட்களுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் ஆட்டோக்கள் ஓட தொடங்கியது. ஒரு நபரை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற தொழிலை பாதிக்கும் விதிமுறையை தளர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
60 நாட்களுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் ஆட்டோக்கள் ஓட தொடங்கியது. ஒரு நபரை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற தொழிலை பாதிக்கும் விதிமுறையை தளர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து ஆட்டோ சேவையும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வில் சிலவற்றை அறிவித்த போதும் ஆட்டோக்கள் இயக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே வருமானம் இல்லாமல் தவித்த ஆட்டோ டிரைவர்களும், ஆட்டோ உரிமையாளர்களும் ஆட்டோக்களை ஓட்ட எப்போது அரசு அனுமதி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.
இந்தநிலையில் தமிழக அரசு ஊரடங்கில் தளர்வு அளித்து நேற்று மாநிலம் முழுவதும் ஆட்டோக்களை ஓட்ட (சென்னை தவிர) அனுமதி அளித்தது. அதிலும் ஆட்டோவில் ஒரு நபர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பன போன்ற சில கட்டுப்பாடுகளையும் விதித்தது.
3 முறை சுத்தப்படுத்த வேண்டும்
குமரியில் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. நோய்க்கட்டுப்பாட்டு (தடை செய்யப்பட்ட பகுதி) பகுதிகளில் ஆட்டோக்களை இயக்கவும், அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களை ஓட்டவும் அனுமதி அளிக்கவில்லை.
ஆட்டோவில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிடைசர்களை ஓட்டுனர்கள் வைத்திருக்க வேண்டும். ஓட்டுனர்களும், பயணிகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் ஆட்டோவை 3 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஓட்டுனர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவி வாகனத்தில் சுகாதாரத்தை பேண வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டார்.
60 நாட்களுக்குப்பிறகு...
இந்த உத்தரவை தொடர்ந்து 60 நாட்களுக்கு பிறகு நேற்று குமரி மாவட்டத்தில் வழக்கம் போல் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்கள் ஓடின. ஒரு பயணி மட்டுமே செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்ததால் ஆட்டோக்களில் பயணிக்க வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் குறைவான அளவில் தான் சவாரிகள் வந்ததாக ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்தனர்.
அதே சமயத்தில், சில ஆட்டோ டிரைவர்கள், அதிகமானவர்களை ஏற்றிச் சென்றதையும் காணமுடிந்தது. குடும்பத்தோடு வருபவர்களை ஏற்றித்தானே செல்ல வேண்டும். மேலும், கூடுதலான நபர்களை ஆட்டோவில் ஏற்றிச்செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஒருவர் மட்டுமே ஆட்டோவில் ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற விதிமுறையை பின்பற்ற நாகர்கோவிலைச் சேர்ந்த டிரைவர், தன்னுடைய ஆட்டோவில் இருக்கையை அகற்றினார். மேலும், அந்த இடத்தில் ஒருவர் மட்டுமே இருக்கும் வகையில் இருக்கையை அமைத்தபடி நேற்று ஓட்டினார். டிரைவரின் இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.
மகிழ்ச்சி
இதுதொடர்பாக நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆட்டோ நிறுத்த ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியன்:-
நான் ஆட்டோ ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் எனது குடும்பத்தை நடத்தி வருகிறேன். ஆட்டோக்கள் இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது என்னை போன்றோருக்கு மகிழ்ச்சித்தான். இருந்தாலும் வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஒரு நபர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் எங்களது தொழிலை சற்று பாதிக்கும் வகையில் தான் இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். ஏனென்றால் ஒரு பயணி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் துணைக்கு ஒருவரை அழைத்துக் கொண்டு தான் செல்வோம் என்று சொல்வார்கள். நாங்கள் அரசு உத்தரவு படி ஒரு நபர் மட்டும்தான் பயணிக்க வேண்டும் என சொல்லும் பட்சத்தில் எங்களது வாடகை சவாரி பாதிக்கப்படும். எனவே அரசு, எங்களது வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்கு சீக்கிரம் கொண்டுவர மேலும் தளர்வுகள் வழங்க வேண்டும் என்றார்.
2 பேருக்கு அனுமதி
நாகர்கோவிலைச் சேர்ந்த ஆசிரியை பத்மா:- ஆட்டோக்களை இயக்க அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. என்னை போன்றோர் வெளியில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் ஆட்டோக்களைத்தான் பயன்படுத்தி வருகிறோம். ஆட்டோக்கள் ஓடாததால் எங்கும் செல்ல முடியாமல் முடக்கப்பட்டு கிடந்தோம். எனவே ஆட்டோக்களை ஓட்டலாம் என்று அரசு கூறியிருப்பது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால் ஆட்டோவில் ஒரு பயணி மட்டும் பயணிக்க வேண்டும் என்று கூறியிருப்பது சரியல்ல. கணவன், மனைவி வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றாலோ, ஒரு குடும்பத்தினர் வெளியில் செல்ல நேர்ந்தாலோ 2 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ஆட்டோக்கள் பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் செலவு அதிகமாகும். ஆட்டோவில் ஒரு பெண் மட்டும் தனிமையாக பயணித்தால் அவருக்கு பாதுகாப்பும் இருக்காது. எனவே குறைந்தது 2 பேராவது ஆட்டோவில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story