மாவட்ட செய்திகள்

உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்குமதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு ஆஸ்பத்திரி மாறுவது எப்போது? + "||" + For lifesaving emergencies When is the Madurai Super Specialty Government Hospital?

உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்குமதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு ஆஸ்பத்திரி மாறுவது எப்போது?

உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்குமதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு ஆஸ்பத்திரி மாறுவது எப்போது?
உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்கு மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனை மாறுவது எப்போது என்பது குறித்தும், கொரோனா சிகிச்சைக்கு வேறு கட்டிடத்தை வார்டாக ஒதுக்க வேண்டும் என்பது குறித்தும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மதுரை, 

உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்கு மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனை மாறுவது எப்போது என்பது குறித்தும், கொரோனா சிகிச்சைக்கு வேறு கட்டிடத்தை வார்டாக ஒதுக்க வேண்டும் என்பது குறித்தும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி

மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் எதிரே, அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் சுமார் 5 ஏக்கரில் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி உள்ளது. இதற்காக பிரதமரின் சுவஸ்தா சுரக்‌ஷா யோஜனா திட்டத்தில் ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஓராண்டுக்கு முன்பு அந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறந்துவைக்கப்பட்டது. பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூளை நரம்பியல், சிறுநீரகவியல், சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை, ரத்தநாளங்கள் துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை, குடல் மற்றும் இரைப்பை மருந்தியல் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை துறை என 7 உயிர்காக்கும் அதிநவீன சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வந்தன.

இந்த சிகிச்சையை அளிப்பதற்கு வசதியாக அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியை தமிழக அரசு வழங்கியது. இதுதவிர வருடாந்திர செலவுத் தொகையும் பல கோடி வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்தபடியாக தனியார் மருத்துவமனைகளை விடவும் பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட அதிநவீன மருத்துவமனையாக மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு ஆஸ்பத்திரி மாறியது.

இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மூலம் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பயன்பெற்று வந்தனர். ஏராளமான அறுவை சிகிச்சைகளும் நடைபெற்று பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

இதன்மூலம் தென் மாவட்ட மக்கள் சென்னை, திருவனந்தபுரத்துக்கு சென்று சிகிச்சை பெறுவதை குறைத்து, மதுரைக்கு வந்து இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

கொரோனா வார்டாக மாற்றம்

இந்த நிலையில் கொரோனா பரவ தொடங்கியதும், பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த ஆஸ்பத்திரி, கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களை இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அங்கு 500-க்கும் மேற்பட்ட படுக்கைகளும் தயார் செய்யப்பட்டன.

இதற்கு அப்போதே பல்வேறு மருத்துவ நிபுணர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டது.

இதனால் மருத்துவமனைக்கு ஏற்பட்ட பாதிப்பு என்னவென்றால், கடந்த 60 நாட்களுக்கும் மேலாக அந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன மருத்துவ கருவிகள் அனைத்தும் செயல்பாடின்றி முடங்கி கிடப்பதுதான் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனாவை குணப்படுத்துவது ஒன்றே தற்போதைய முக்கிய பணி என பெரிய அரசு ஆஸ்பத்திரிகள் செயல்படுவதாகவும், மற்ற உயிர் காக்கும் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் நிலை தற்போது 2-வது பட்சமாக மாறிவிட்டது எனவும் நோயாளிகள் பலர் தெரிவிக்கிறார்கள். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

கேரளாவுக்கு செல்லும் நிலை

மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு ஆஸ்பத்திரி இவ்வாறு கொரோனா ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டுள்ளதால், உயிர்காக்கும் சிகிச்சைகள் அவசர சிகிச்சைகள் பெற தென்மாவட்ட மக்கள் கேரளாவுக்கு செல்லும் பரிதாபமும் உருவாகியிருக்கிறது.

மேலும் அவசர சிகிச்சைக்காக ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டி இருப்பதாகவும், அங்கும் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதுதான். கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க எத்தனையோ மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், ஏன் ரெயில் பெட்டிகளைக்கூட சிகிச்சை வார்டாக மாற்றிவிட முடியும் என கூறுகிறார்கள். தமிழகத்தில் அதுபோன்ற அபாய நிலை கொரோனாவால் ஏற்படவில்லை. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வேறு ஒரு கட்டிடத்தை கொரோனா சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாம்.

ஒரு மணி நேர தாமதத்தால் சிகிச்சை அளித்தும் பலனின்றி நோயாளிகள் இறக்கும் சம்பவங்கள் ஏராளம் நடந்துள்ளன. எனவே இருதயம், சிறுநீரகம், மூளை தொடர்பான உயிர் காக்கும் அவசர சிகிச்சை பிரிவை கொரோனாவுக்கு ஒதுக்கியதன் மூலம் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் ஏழை மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் போதிய ஏற்பாடுகளை செய்யலாம்.

சிவகாசி, பரமக்குடி

இதற்கிடையே சிவகாசி, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வார்டு அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் குறைந்த அளவிலான கொரோனா நோயாளிகள்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே புதிதாக சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளில் குறிப்பிடத்தக்கவர்களை சிவகங்கைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யலாம். பல்வேறு வசதிகள் கொண்ட தாலுகா அரசு மருத்துவமனைகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

1-ந்தேதி முதல்

வருகிற 1-ந்தேதி முதல் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள பழைய அறுவை சிகிச்சை அரங்குகளில் வைத்து உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. அவ்வாறு சிகிச்சை மேற்கொண்டாலும் உரிய வசதிகள் கிடைக்குமா, மருத்துவ உபகரணங்களை இடமாற்றுவதில் ஏற்படும் சிக்கல்கள், ஒருவேளை ஒன்றிரண்டு மாதத்தில் கொரோனா முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது என்ற நிலை வந்ததும் மீண்டும் பழைய இடத்துக்கே மருத்துவ உபகரணங்கள், வார்டுகளை மாற்றுவது என இடியாப்ப சிக்கலாக இந்த விஷயம் நீளும். அதற்கு ஒரு தீர்வாக வருகிற 1-ந் தேதி முதல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை, மீண்டும் அவசர சிகிச்சைக்கு செயல்பட வைக்கலாம். தென்மாவட்ட மக்களுக்கு என்று அவசர சிகிச்சைக்கு என கிடைத்துள்ள வரபிரசாதம் அது.

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது போல், மதுரையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வைத்துவிட்டு வெளிமாநிலங்களுக்கு ஏழை நோயாளிகளை அலைய விடக்கூடாது. இதனால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என பலதரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வருகின்றன.