ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கண்மாய்களில் சீரமைப்பு பணி நடக்கிறது கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் குடி மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கலெக்டரிடம் வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
வாடிப்பட்டி,
கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் குடி மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கலெக்டரிடம் வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
பெரியாறு பாசன கால்வாய்
வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பேரணையில் தொடங்கி கள்ளந்திரி வரை செல்லும் பெரியாறு பாசனகால்வாய் வழியாக சென்று விவசாயிகளை பயனடைய செய்கின்றன. இந்த கால்வாயின் முதல் மடை வாடிப்பட்டி போடிநாயக்கன்பட்டியில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் முடிந்து பருவமழை காலங்களில் பெரியாறு அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் முதல் போக சாகுபடிக்கு ஜுன் மாதம் 15-ந்தேதி திறந்துவிடப்படும். அதன்பின் 120 நாட்கள் தண்ணீரின் அளவை பொறுத்து முழுவதுமாகவும், முறை வைத்தும் வழங்கப்படும். பின்பு அணையில் உள்ள தண்ணீரின் அளவை வைத்து இரண்டாம் போகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தண்ணீர் திறக்கப்படும். அப்போது மழைக்காலம் தொடர்ந்தால் தொடர்ந்து தண்ணீர் வந்தபடி இருக்கும்.
சீரமைக்கும் பணி
இந்த தண்ணீர் வரும் பெரியாறு பாசன கால்வாயை தண்ணீர் வரத்து இல்லாத கோடைகாலங்களில் சீரமைப்பது பொதுப்பணித்துறையின் வேலையாகும். ஆனால் பல ஆண்டுகளாக கால்வாய் மதகுகள், ஷட்டர்கள், கால்வாய் கரைகளுக்கு போடப்பட்ட சிமெண்டு சிலாப், கிளை கால்வாய்கள், வாய்க்கால்கள் என்று அனைத்தும் சீர்குலைந்தும், சிதிலமடைந்தும் காணப்படுகின்றன. அதை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
அந்த பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் வினய் வந்தார். அப்போது அவரிடம் முதல் மடையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கால்வாயில் சிமெண்டு தளம் அமைத்தபோது பள்ளமானது. இதனால் தண்ணீர் முழுமையாக வருவது இல்லை என்றும், அதை சீரமைக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மேலும் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், கரைகளை உயர்த்தாமல் அரைகுறையாக சீரமைப்பு பணிகள் செய்வதாகவும் புகார் கூறினர்.
ஏமாற்றம்
அதே நேரத்தில் நீரேத்தான் ரெங்கசமுத்திரம் அருகில் விவசாயிகள் தங்கள் பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணிகளை பெயரளவில் செய்வதை நிறுத்திவிட்டு, முழுமையாக பயன்பெறும்படி அந்த பணிகளை செய்யக்கோரி கலெக்டரிடம் புகார் தெரிவிக்க காத்திருந்தனர். ஆனால் கலெக்டர், போடிநாயக்கன்பட்டிக்கு மட்டும் சென்று ஆய்வு செய்து விட்டு மதுரைக்கு திரும்பி சென்றதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
Related Tags :
Next Story