கொரோனா 2-வது கட்ட அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை


கொரோனா 2-வது கட்ட அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 May 2020 10:15 PM GMT (Updated: 24 May 2020 7:15 PM GMT)

கொரோனா 2-வது கட்ட அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு,

ஐதராபாத் இந்திய பொது சுகாதார நிறுவன பேராசிரியரும், பொது சுகாதார நிபுணருமான வி.ரமணதாரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனாவை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் காசநோய், ஊட்டச்சத்து குறைபாடு, காலரா போன்ற நோய்களால் ஏற்பட்ட மரணங்கள் நமக்கு தெரியவில்லை. கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்பட்ட அந்த உயிர்கள், தற்போது அந்த நோய்களுக்கு மரணம் அடைகின்றன. இந்த கெரோனா பாதிப்பு என்பது, மனிதர்களால் சுற்றுச்சூழல் பரவலாக பாதிக்கப்பட்ட நிலையில் இயற்கை அன்னையின் கோபத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

அதாவது விலங்குகள் வசிக்கும் பகுதி குறைவு, மனிதர்கள் மற்றும் விலங்குகள் மோதல் பிரச்சினை போன்றவை தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த மாத இறுதிக்குள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும் என்று கணிக்கப்பட்டது. அதையும் தாண்டி கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

கொரோனாவால் ஏற்படும் மரணங்கள், பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்றாலும், ஒட்டுமொத்த மரணங்களை கவனத்தில் கொள்வது மிக முக்கியம். கொரோனா பரிசோதனை செய்யாத மரணங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் இருக்கலாம். இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. அதனால் தான் நமது நாட்டில் கொரோனா மரண விகிதம் குறைவாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் உச்சத்தை தொடவில்லை. இங்கு கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தால், கொரோனா 2-வது கட்ட பரவல் என்ற அலையை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். 1918-ம் ஆண்டு ஸ்பேனிஸ் புளு என்ற வகை வைரஸ் காய்ச்சல் அப்படி தான் 2-வது கட்டத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனாவுக்கு தடுப்பூசியோ அல்லது தடுப்பு மருந்தோ இதுவரை இல்லை. அதனால் நாம் தூய்மையாக இருப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை தீவிரமாக அமல்படுத்த வேண்டியது அவசியம். ஊரடங்கு பாதியாக தளர்த்தப்பட்டு உள்ளதால், மீண்டும் பழைய நிலை அதாவது தூய்மையற்ற நிலைக்கு செல்வதை நாம் பார்க்கிறோம். இந்த கொரோனா நிச்சயம் தீவிரமாக பரவும். இந்த வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம். ஆஸ்பத்திரிகளில் செயற்கை சுவாச கருவி, பிராண வாயு அதாவது ஆக்சிஜன், தீவிர சிகிச்சை பிரிவு வசதிகளை அதிகரிக்க வேண்டியது அவசியம்.

பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க வருகிற 1-ந் தேதி முதல் ஊரடங்கை வாபஸ் பெற வேண்டும். அதே நேரத்தில் தூய்மையாக இருப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் ஊரடங்கு வாபஸ் பெறப்பட்ட பிறகு கொரோனா பாதிப்பு பெரிய அளவில் அதிகரிக்கும். கேரளாவில் உள்ளது போல் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்று சரியாக கணிக்க முடியாது. ஆனால் தீவிரமான பாதிப்புகளை எதிர்கொள்ள மருத்துவ துறையை நாம் தயார்படுத்த வேண்டும்.

இவ்வாறு வி.ரமணதாரா கூறினார்.

Next Story