கர்நாடகத்தில் இன்று முதல் 4 விமான நிலையங்களில் மீண்டும் விமான சேவை


கர்நாடகத்தில் இன்று முதல் 4 விமான நிலையங்களில் மீண்டும் விமான சேவை
x
தினத்தந்தி 25 May 2020 3:45 AM IST (Updated: 25 May 2020 12:49 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் இன்று முதல் 4 விமான நிலையங்களில் இருந்து விமான சேவை தொடங்குகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் இன்று முதல் 4 விமான நிலையங்களில் இருந்து விமான சேவை தொடங்குகிறது. அவ்வாறு விமானத்தில் தமிழகத்தில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமை கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. இதையடுத்து, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மட்டும் 108 விமானங்கள் பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களுக்கு புறப்பட்டு செல்கின்றன. அதுபோல, பிற மாநிலங்களில் இருந்து 107 விமானங்கள் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவை போன்று மங்களூரு, உப்பள்ளி, பெலகாவி விமான நிலையங்களில் இருந்தும் இன்று விமான சேவை தொடங்க இருக்கிறது. இதன் மூலம் கர்நாடகத்தில் 4 விமான நிலையங்களில் இருந்து இன்று முதல் விமான சேவை தொடங்கி நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால் மைசூரு விமான நிலையத்திற்கு விமானங்கள் செல்லவும், அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இயங்கவும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் விமானங்களில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவது தொடர்பாக கர்நாடக அரசின் சுகாதாரத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், தடை செய்யப்பட்ட சேவைகளின் பட்டியலில் இருந்து விமான போக்குவரத்து நீக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று முதல் கர்நாடகத்தில் விமான சேவை அனுமதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஊரடங்கு காலத்தில் விமானங்களில் இருந்து வரும் பயணிகள், விமானத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் நடமாடலாம் என்றும் அரசு கூறியுள்ளது. மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன்சூட் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மராட்டியம், குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான், டெல்லி, மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் இருந்து விமானங்களில் வரும் பயணிகள் கட்டாயம் 7 நாட்கள் தனிமை கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். அதன் பிறகு 7 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரு சர்வதேச விமான நிலையம், தனிமனித விலகலை உறுதிபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பயணிகள் ஓய்வு அறையில் இருக்கும் இருக்கைகளில் இடைவெளி விட்டு அமர வேண்டும் என்பதை குறிக்கும் ஸ்டிக்கர்களை இருக்கையில் ஒட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பயணிகள் மற்றும் டாக்சி ஓட்டுனர்களின் பாதுகாப்பில் நாங்கள் அதிக அக்கறை செலுத்துகிறோம். டாக்சிகளை கிருமிநாசினி கொண்டு தூய்மைபடுத்துவது, டாக்சி பயணத்தை தொடங்குவதற்கு முன்பு டிரைவர்கள் தெர்மல் ஸ்கேனர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். கொரோனா பரவ உள்ள அனைத்து வாய்ப்புகளையும் தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். முகக்கவசம் அணிவது, சானிடைசர் திரவத்தை பயன்படுத்த வேண்டும் என்று டிரைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். டாக்சியை பாதுகாப்பான வாகனமாக மாற்ற நாங்கள் அனைத்து விதமான நடவடிக்கையையும் எடுத்துள்ளோம். டிரைவரின் உதவி இல்லாமல் பை உள்ளிட்ட சரக்குகளை காரில் ஏற்றுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்துகிறோம்.

வயதான பயணிகளுக்கு டிரைவர்கள் உதவுவார்கள். டாக்சி டிரைவர்கள் மட்டுமின்றி, அந்த டாக்சிகளை நிர்வகிக்கும் பணியாளர்களும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். டாக்சி டிரைவர்களுக்கு விமான நிலைய வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பும் தெர்மல் ஸ்கேனர் சோதனை நடத்தப்படும். அவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால், அவர்களை டாக்சியை இயக்க அனுமதிக்க மாட்டோம். பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story