கோவை மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் குவிந்த பொதுமக்கள்


கோவை மீன் மார்க்கெட்டில்  சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 24 May 2020 11:19 PM GMT (Updated: 24 May 2020 11:19 PM GMT)

கோவை மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் குவிந்தனர்.

கோவை,


கொரோனா தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. கோவை உக்கடத்தில் செல்வபுரம் பைாஸ் சாலையில் மாநகராட்சி மீன் மொத்த மார்க்கெட் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மீன் விற்பனை அமோகமாக நடைபெறும்.

இந்த மீன் மார்க்கெட்டிற்கு கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. இங்கு கொண்டு வரப்படும் மீன்கள் கோவையின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

சமூக இடைவெளி

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உக்கடம் மீன்மார்க்கெட்டில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் சமுக இடைவெளியை கடைபிடிக்காமல் வந்து மீன் வாங்கி சென்றனர். வெளியூர்களில் இருந்து லாரிகள் வருவதில் சிக்கல் உள்ளது. இதன் காரணமாக மீன் வரத்து குறைவாக இருக்கிறது. இதையடுத்து மீன் விலை அதிகரித்து விட்டது.

இது குறித்து மீன் வியாபாரி அப்பாஸ் கூறுகையில், கோவை மார்க்கெட்டுக்கு கேரள மாநிலம் கொச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மீன் வரத்து குறைந்து விட்டது. இதனால் மீன் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.800 வரை விற்ற வஞ்சிரம் நேற்று ரூ.1300-க்கும், ரூ.100-க்கு விற்ற மத்தி ரூ.350-க்கும், பாறை ரூ.700-க்கும், இறால் ரூ.600-க்கும் விற்றது என்றார்.

மீன் மார்க்கெட் தவிர கோவையின் மற்ற இடங்களில் உள்ள இறைச்சிக்கடைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது. கோழி மற்றும் ஆட்டு இறைச்சிக்கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து இறைச்சி வாங்கிச் சென்றனர்.

Next Story