புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா


புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 May 2020 11:30 PM GMT (Updated: 24 May 2020 11:30 PM GMT)

புதுச்சேரியில் நேற்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் புதிதாக மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து தற்போது 29 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே 12 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக 6 ஆயிரத்து 349 பேருக்கு பரிசோதனை நடத்தி உள்ளோம். கடந்த 10 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் சிவப்பு மண்டல பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்கு வந்தவர்களே காரணம். இதை தடுக்க கடந்த காலங்களை போல் எல்லைப்பகுதிகளில் சோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்பாக புதுவை அரசுக்கு முறையாக தகவல் தெரிவிக்குமாறு விமான நிலையங்கள் மற்றும் பக்கத்து மாநில அரசுகளுக்கு முதல்-அமைச்சரும், தலைமை செயலாளரும் கடிதம் எழுதியுள்ளனர்.

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களில் பலர் ஓட்டல்களில் தனிமையாக இருப்பது போல் காட்டி விட்டு புதுச்சேரி பகுதிக்குள் உலா வருகின்றனர். இது தொடர்பான ஆய்வினை தற்போது மேற்கொண்டு உள்ளோம். தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதையொட்டி பொதுமக்கள் சர்வசாதாரணமாக நடமாட தொடங்கி உள்ளனர். இந்த மனநிலை வரக் கூடாது. முன்பு போல் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் கூறியதாவது:-

புதுவையில் 166 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய காலாப்பட்டில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன், சென்னையில் இருந்து மண்ணாடிப்பட்டு வந்த 22 வயது இளைஞர், குருமாம்பேட் பகுதியில் குப்பை பொறுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண், ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்த நபர் மற்றும் சோலை நகரில் வசிக்கும் கடைக்காரருக்கும் தொற்று பரவியுள்ளது. கடைக்காரருக்கு எவ்வாறு தொற்று பரவியது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story