புதுச்சேரி-காரைக்காலில் மதுக்கடைகள் இன்று திறப்பு


புதுச்சேரி-காரைக்காலில் மதுக்கடைகள் இன்று திறப்பு
x
தினத்தந்தி 24 May 2020 11:57 PM GMT (Updated: 24 May 2020 11:57 PM GMT)

புதுச்சேரி, காரைக்காலில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.

புதுச்சேரி,

புதுவை தலைமை செயலகத்தில் கலால் துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் மதுக்கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிதித்துறை செயலாளர் சுர்பீர் சிங், கலெக்டர் அருண், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், கலால்துறை துணை ஆணையர் சஷ்வத் சவுரப் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் 2 மாதங்களுக்கு பிறகு மதுக்கடைகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். மதுபானங்கள் வாங்க வருவோர் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டியது அவசியம். கடைக்காரர்கள் அவர்களுக்கு கிருமி நாசினி வழங்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் தொற்று பரவி விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். தற்போது மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே விதமான 154 வகை மது பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இரு மாநிலங்களிலும் இவற்றின் விலை ஒரே விதமாக இருக்கும். தமிழ்நாட்டில் கிடைக்காத மற்ற வகை மதுபானங்களுக்கு 25 சதவீதம் கொரோனா வரி விதிக்கப்படுகிறது.

சாராயத்துக்கு 20 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. கள்ளுக்கடைகளுக்கு கூடுதல் வரி எதுவும் விதிக்கப்படவில்லை. 20 மதுக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் சேர்த்து 102 மதுபான கடைகளை திறக்க அனுமதி இல்லை. மதுக்கடை திறப்பின் போது ஒவ்வொரு கடை முன்பும் திருத்தப்பட்ட விலை பட்டியலை கடைக்காரர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story