ஊரடங்குக்கு மத்தியிலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்கள் சேகரிப்பு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை


ஊரடங்குக்கு மத்தியிலும்  போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்கள் சேகரிப்பு  அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை
x

கூடலூரில் ஊரடங்குக்கு மத்தியிலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கூடலூர்,

தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டு உள்ளது. தனியார் வாகனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயக்கப்படுகிறது. மேலும் ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் வாகனங்கள், ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது. மேலும் ராஜகோபாலபுரம் முதல் புதிய பஸ் நிலையம் வரை சாலையோரங்களில் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதை காண முடிகிறது.

இதற்கிடையில் ஊரடங்குக்கு மத்தியிலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்களை போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர். குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுதல், கார்களில் 3 பேருக்கு மேல் அமர்ந்து பயணம் செய்தல் உள்பட பல்வேறு விதிமுறைகளை மீறும் வாகனங்கள் அடையாளம் காணப்படுகின்றன. பதிவு எண்களை சேகரித்த பிறகு செல்போன் செயலி மூலம் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு போலீசார் தலா ரூ.100 அபராதம் விதிக்கின்றனர்.

5 ஆட்டோக்கள் மீது வழக்கு

இதுகுறித்து கூடலூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியநாதன் கூறியதாவது:-

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க அனைத்து இடங்களிலும் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும் ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளது. அப்போது போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்கள் மட்டும் சேகரிக்கப்படுகிறது. அதனை கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது செல்போன் செயலி மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. இது குறித்த தகவல், அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்படும். அவர்கள் ஆன்லைனிலேயே அபராத தொகையை செலுத்தலாம். தவறுபவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரசு உத்தரவை மீறி அதிக பயணிகளை ஏற்றி வந்த 5 ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story