நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறப்பு


நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 25 May 2020 9:00 AM IST (Updated: 25 May 2020 9:00 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நகர்ப்பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் நேற்று முதல் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஊரக பகுதிகளில் கடந்த 19-ந் தேதி முதல் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.

அதேபோல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் நேற்று முதல் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சலூன் கடைகள் உள்ளன.

ஏற்கனவே கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் நகர்ப்புறங்களிலும் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன. அதாவது சலூன் கடைகள் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் இயங்கக்கூடாது. தடை செய்யப்பட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்களை பணியமர்த்த கூடாது.

தினமும் 5 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அரசு விதித்த கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து சேலம் மாநகராட்சி மற்றும் எடப்பாடி, மேட்டூர், ஆத்தூர், நரசிங்கபுரம் ஆகிய 4 நகராட்சி பகுதிகளிலும் மற்றும் 33 பேரூராட்சி பகுதிகளிலும் நேற்று முதல் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. சேலம் மாநகர் பகுதியில் ஒரு சில சலூன் கடைக்காரர்கள் அதிகாலை 5 மணிக்கே தங்களது கடைக்கு வந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கிருமி நாசினி, முக கவசம், கையுறை, சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாராக எடுத்து வந்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து காலை 7 மணி அளவில் முக கவசம் அணிந்து முடி வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சலூன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதை அறிந்த இளைஞர்கள் முடிகளை திருத்தம் செய்யவும், முகச்சவரம் செய்வதற்காகவும் கடைக்கு சென்றனர். அப்போது முக கவசம் அணிந்து வந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே முடி திருத்தம் செய்யப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு சலூன் கடைக்காரர்கள் அறிவுறுத்தினர்.

கடந்த 2 மாதங்களுக்கு பின் தற்போது மீண்டும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட தொடங்கி உள்ளதால் அத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story