இலவச வீட்டு மனைகளை பயனாளிகள் பிறருக்கு விற்பனை செய்வதை பதிவு செய்யக் கூடாது மாவட்ட பதிவாளரிடம் மனு


இலவச வீட்டு மனைகளை  பயனாளிகள் பிறருக்கு விற்பனை செய்வதை பதிவு செய்யக் கூடாது  மாவட்ட பதிவாளரிடம் மனு
x
தினத்தந்தி 25 May 2020 10:28 AM IST (Updated: 25 May 2020 10:28 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய-மாநில அரசுகள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய இலவச வீட்டு மனை மற்றும் வீடுகளை வெளிநபர்களுக்கு விற்பனை செய்வதை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என மாவட்ட பதிவாளரிடம் முறையிடப்பட்டுள்ளது.

விருதுநகர்,

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநிலக்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட பதிவாளர் மற்றும் கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

இலவச வீட்டு மனை

மத்திய, மாநில அரசுகள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிட மக்களுக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் இலவச வீட்டுமனைகளை வழங்கி உள்ளது. மேலும் பசுமை வீடுகள் கட்டவும், பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படாத நிலை நீடிக்கிறது.

விற்பனை

இந்த நிலையில், அரசிடம் இலவச வீட்டுமனை மற்றும் வீடுகள் பெற்ற பயனாளிகள் தங்கள் வீடுகள் மற்றும் வீட்டு மனைகளை வெளிநபர்களுக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. பலர் வெளிநபர்களிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாதநிலையில் வீட்டுமனை மற்றும் வீடுகளை கடன் கொடுத்தவர்களுக்கு விற்பனை செய்யும் பரிதாபமும் ஏற்படுகிறது.

விதிகளின்படி இலவச வீட்டு மனைகள் மற்றும் வீடுகளை வெளிநபர்களுக்கு விற்பனை செய்ய அனுமதி இல்லை. பயனாளி இறந்துவிட்டால் அவர்களது சட்டபூர்வ வாரிசுகளுக்கு தான் இலவச வீட்டுமனைகள் கொடுக்கப்பட வேண்டும்.

கோரிக்கை

எனவே இவ்வாறு வெளிநபர்களுக்கு விற்பனை செய்யப்படும் இலவச வீட்டுமனை மற்றும் வீடுகளுக்கு பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதை தவிர்க்க மாவட்டத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு உத்தரவிட வேண்டுகிறோம். மாவட்ட நிர்வாகமும் முறைகேடாக இலவச வீட்டு மனைகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story