விக்கிரவாண்டியில் புதிய நீதிமன்றம் கட்ட இடம் தேர்வு


விக்கிரவாண்டியில் புதிய நீதிமன்றம் கட்ட இடம் தேர்வு
x
தினத்தந்தி 25 May 2020 11:00 AM IST (Updated: 25 May 2020 11:00 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டியில் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை கலெக்டர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்தனர்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி தாலுகா புதிய நீதிமன்றம் தற்போது கச்சியப்பசெட்டி தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றத்திற்கு நிரந்தரமாக புதிய கட்டிடம் கட்ட விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் இடங்களை தேர்வு செய்வது தொடர்பாக கலெக்டர், கூடுதல் கலெக்டர், நீதிபதிகள் ஆய்வு செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை ஊராட்சிக்குட்பட்ட அடைக்கலாபுரம் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் 84 சென்ட் இடத்தை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆனந்தி ஆகியோர் பார்வையிட்டு தேர்வு செய்தனர். இந்த இடம் தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட வரைபடத்தை வழங்குமாறு கலெக்டரிடம் மாவட்ட நீதிபதி கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து அதே கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு சென்ற கலெக்டர் அண்ணாதுரை, அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த ரேஷன் பொருட்களான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு ஆகியவற்றை பார்வையிட்டதோடு கிடங்கிற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், கோட்டாட்சியர் ராஜேந்திரன், தாசில்தார் பார்த்திபன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எழிலரசு, நந்தகோபாலகிருஷ்ணன், தலைமை சர்வேயர் ரவி, வட்ட சார் ஆய்வாளர்கள் ரஜினி, கலா, வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன், ஊராட்சி செயலாளர் அலமேலு, கூட்டுறவு வங்கி தலைவர் பூர்ணராவ், வி.சாலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செங்கல்வராயன்சுரேஷ், வங்கி இயக்குனர் பலராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story