ஈரோட்டில் வெயில் 106 டிகிரியை தொட்டது


ஈரோட்டில் வெயில் 106 டிகிரியை தொட்டது
x
தினத்தந்தி 25 May 2020 11:52 AM IST (Updated: 25 May 2020 11:52 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் வெயில் 106 டிகிரியை தொட்டது. அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

ஈரோடு,

ஈரோட்டில் கோடை காலம் தொடங்கியதில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தினமும் வெயில் 100 டிகிரியை கடந்து சுட்டெரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் பெய்த மழையால் ஓரிரு நாட்கள் மட்டுமே வெயிலின் தாக்கம் சற்று குறைவாக காணப்பட்டது. இதையடுத்து வெயிலின் கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி உள்ளது.

கடந்த சில நாட்களாக அதிகபட்சமாக 104 டிகிரி வரை வெயில் சுட்டெரித்து வந்தது. இந்தநிலையில் நேற்று ஈரோட்டில் அதிகபட்சமாக 106 டிகிரி வெயிலின் தாக்கம் இருந்தது. ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு முன்பு பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்ததால், வெயிலின் தாக்கத்தை அந்தளவுக்கு உணரவில்லை. தற்போது பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால், வேலை காரணமாக பொதுமக்கள் வெளியே செல்கின்றனர்.

வெயிலின் கொடூர தாக்கம் காரணமாக ஈரோடு நகர் பகுதியில் அனல் காற்று வீசியது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் மிகவும் சிரமப்பட்டனர். அவர்களது தோல் வெப்பத்தால் சுடுவதை போன்ற உணர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக பலரும் வீடுகளில் இருந்து வெளியே வருவதையும் தவிர்த்தனர்.

ஒருபுறம் கொரோனாவின் அச்சம் இருக்கும் நிலையில், வெயிலின் கொடுமையும் அதிகமாக இருந்ததால் பொதுமக்களும் வீடுகளிலேயே தஞ்சம் புகுந்தனர். இதனால் ஈரோடு மாநகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடியே காணப்பட்டன.

Next Story