கியூ ஆர் கோடு அச்சிடப்பட்ட புதிய திருமண அழைப்பிதழ்கள்; மணமக்களுக்கு வாழ்த்து கூறி மொய்பணமும் அனுப்பலாம்
திருப்பத்தூரை சேர்ந்த தொழிலாளி புதிய முயற்சியாக உருவாக்கிய கியூ ஆர் கோடு அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் மூலம் செல்போனிலேயே மணமக்களுக்கு வாழ்த்து கூறுவதோடு இணையதளம் மூலம் மொய் பணமும் செலுத்தும் வசதி ஏற்படுத்தியுள்ளது வரவேற்றை பெற்றுள்ளது.
திருப்பத்தூர்,
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலால் அனைத்துத் தொழிற்சாலைகள், கடைகள், கோவில்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து நிகழ்ச்சிகள், திருமணம், பிறந்தநாள், காது குத்து, மஞ்சள் நீராட்டு, கோவில்களில் முக்கிய விழாக்கள் தடை பட்டுள்ளது. திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பதால் மொய்ப்பண வசூல் செய்ய முடியாமல் திருமண வீட்டாருக்கு இழப்பும் ஏற்பட்டது.
இதனை தவிர்க்க திருப்பத்தூரை சேர்ந்த தொழிலாளி வடமலை சங்கர் என்பவர் புதிதாக சமூக இடைவேளைக்கு உகந்த அழைப்பிதழை வடிவமைத்துள்ளார்.
அந்த அழைப்பிதழில் கவரில் முன் பக்கம் ‘கியூ ஆர் கோடு’ அச்சிட்டுள்ளார். இதனை நாம் செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால் செல்போனில் உள்ள யூ டியூப் மூலம் திருமணம் நடத்தும் மணமக்களின் பெற்றோர் அல்லது மணமக்கள் தங்களது திருமணம் அல்லது நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்து, நேரடியாகப் பேசும் வீடியோ வருகிறது.
திருமணம் அல்லது நிகழ்ச்சிகள் முடிந்து அரைமணி நேரத்தில் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் நிகழ்ச்சிகளின் பதிவுகளை காணலாம். அழைப்பிதழில் உட்பகுதியில் உள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளில் தொகுப்பைக் காணலாம். அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணுக்கு குறிப்பிட்ட நேரத்தில் போன் செய்தால், திருமணமான மணமக்களிடம் நேரடியாக வாழ்த்துகளை கூறலாம்.
இணையதளம் மூலம் வாழ்த்துகளை தெரிவித்தவர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கலாம். மேலும் மொய் பணம் செலுத்துவோர் அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள மணமக்களின் வங்கி கணக்கில் கூகுள் பே போன் பே மூலம் மொய் பணம் செலுத்தலாம். இவ்வாறு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இதனை உருவாக்கிய வடமலை சங்கர் கூறியதாவது:-
தற்போதுள்ள சூழ்நிலையில் திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் 50 பேருக்குமேல் அனுமதிக்கக் கூடாது என அரசு அறிவித்துள்ளது. நமது பாரம்பரிய திருமணம் மற்றும் சடங்குகள், கோவில் திருவிழாக்கள் அனைத்தையும் பொதுமக்கள் காண வேண்டும் என விருப்பப்படுகிறார்கள். அதற்காக என்ன செய்யலாம்? என யோசனை செய்து, அழைப்பிதழில் கியூ ஆர் கோடை பயன்படுத்தி புதுமையான அழைப்பிதழை தயார் செய்து பார்த்தோம்.
இது, பொதுமக்களுக்கு பிடித்திருந்ததால் அதை திருமண நிகழ்ச்சிக்கு அச்சடித்து தந்து கொண்டிருக்கிறோம். இதற்காக குறைந்த கட்டணமே வாங்குகிறோம். இதன் மூலம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கலாம். திருமணத்துக்கு செல்ல முடியாதவர்கள் திருமண நிகழ்ச்சிகளை செல்போனிலேயே பார்ப்பதோடு மணமக்களுக்கும் வாழ்த்துகளை கூறி மொய்ப்பணமும் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மணமக்களை வாழ்த்திய திருப்தி ஏற்படுவதோடு மொய்ப்பணம் செலுத்தப்படுவதால் மணவீட்டாரும் நஷ்டத்தை தவிர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அந்த அழைப்பிதழை மாவட்ட கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோரிடம் நேரில் சென்று காண்பித்து செய்முறை விளக்கம் அளித்தார். அழைப்பிதழை செய்த வடமலை சங்கரை இருவரும் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story