நெமிலி அருகே “போதையில் நடந்த தகராறில் புதுமாப்பிள்ளையை கொலை செய்தோம்” - கைதான 6 பேரும் வாக்குமூலம்
நெமிலி அருகே புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் வெட்டி கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பனப்பாக்கம்,
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள கீழ்வெங்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செழியன். இவரது மகன் பாரதி என்கிற பாரதிதாசன் (வயது 23) காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த படாளம் கிராமத்தில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். பாரதிதாசன் அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சங்கீதாவை (20) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் படாளம் கிராமத்தில் வசித்து வந்தனர்.
பாரதிதாசன் மனைவி சங்கீதாவுடன் கடந்த 22-ந் தேதி சொந்த ஊருக்கு வந்தார். இரவு 10 மணியளவில் பாரதிதாசன் வெளியே செல்வதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவர் நள்ளிரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் பாரதிதாசன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் 23-ந்தேதி காலை அதேபகுதியில் உள்ள அரிசிமில் வளாகத்தில் பாரதிதாசன் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பாரதிதாசன் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து கொலை குற்றவாளிகளை பிடிக்க அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மேற்பார்வையில் நெமிலி இன்ஸ்பெக்டர் பாரதி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் பரந்தாமன், காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் பாரதிதாசன் குடும்பத்தினர், நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அதே கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (21), சேதுபதி (20), ஆனந்தகுமார் (23), தமிழ்செல்வன் (22), தீனதயாளன் (22), சதீஷ் (31) ஆகிய 6 பேர் பாரதிதாசனை கொலை செய்தது தெரிய வந்தது. அதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பாரதிதாசனை கத்தியால் வெட்டி கொலை செய்ததாக அவர்கள் வாக்குமுலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story