ஏரல் அருகே, சிவகளையில் அகழாய்வு பணி தொடங்கியது - முககவசம் அணிந்து பணியாற்றிய அதிகாரிகள்


ஏரல் அருகே, சிவகளையில் அகழாய்வு பணி தொடங்கியது - முககவசம் அணிந்து பணியாற்றிய அதிகாரிகள்
x
தினத்தந்தி 26 May 2020 4:00 AM IST (Updated: 26 May 2020 12:58 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே சிவகளையில் அகழாய்வு பணி நேற்று தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அதிகாரிகள் முககவசம் அணிந்து பணியாற்றினர்.

ஏரல், 

பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்டங்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்க ஆபரணங்கள், வெண்கலத்தாலான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன்மூலம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் நாகரிகத்தில் தலைசிறந்து விளங்கினர் என்பது உலகுக்கு பறைசாற்றப்பட்டது.

இதையடுத்து ஆதிச்சநல்லூர், ஏரல் அருகே சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித் தது. அதன்படி ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பாண்டியராஜா கோவில் அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகழாய்வு பணி தொடங்கியது. அங்கு நில அளவீடு செய்து, ரேடார் மூலம் தரைக்கு அடியில் உள்ள பொருட்களை கண்டறிந்தனர். பின்னர் அகழாய்வு பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

சிவகளையில் அகழாய்வு

இதற்கிடையே ஏரல் அருகே சிவகளை பரும்பு பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவனாந்தம் தலைமையில், தொல்லியல் துறை அலுவலர்கள் பிரபாகர், தங்கத்துரை, காசிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் நேற்று சிவகளை பரும்பு பகுதிக்கு வந்தனர்.

அங்குள்ள பரும்பு மற்றும் வெள்ளைத்திரடு ஆகிய 2 இடங்களில் தலா 100 சதுர மீட்டர் பரப்பளவில் நில அளவீடு செய்தனர். பின்னர் அங்கு தொல்லியல் துறையினர் அகழாய்வு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் வருகிற செப்டம்பர் மாதம் வரையிலும் அகழாய்வு பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

ஆதிச்சநல்லூர்

இதேபோன்று ஆதிச்சநல்லூரிலும் ஏற்கனவே அளவீடு செய்த இடத்தில் தொல்லியல் துறையினர் அகழாய்வு பணி மேற்கொண்டனர். அகழாய்வில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பணியாற்றினர்.

Next Story