63 நாட்களுக்கு பிறகு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உற்பத்தி தொடங்கியது; 60 சதவீத நிறுவனங்களே செயல்பட்டன


63 நாட்களுக்கு பிறகு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உற்பத்தி தொடங்கியது; 60 சதவீத நிறுவனங்களே செயல்பட்டன
x
தினத்தந்தி 26 May 2020 12:15 AM GMT (Updated: 25 May 2020 7:56 PM GMT)

அரசின் உத்தரவை தொடர்ந்து 63 நாட்களுக்கு பிறகு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 60 சதவீத நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியை தொடங்கின.

சென்னை, 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இழந்த பொருளாதாரத்தையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில் 25 சதவீத பணியாளர்கள் தான் இருக்கவேண்டும் என்பன உள்பட அடுக்கடுக்கான பல்வேறு நிபந்தனைகளை விதித்து, கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, அம்பத்தூர் தொழிற்பேட்டை 63 நாட்களுக்கு பின்னர் நேற்று இயங்கத்தொடங்கியது. ஆனாலும் பழைய சுறுசுறுப்பு இல்லை. பெரும்பாலான பணி இடங்களின் முகப்பில் கைகளை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தும் கிருமிநாசினிகள் வைக்கப்பட்டிருந்தன. ஊழியர்கள் அதில் கைகளை சுத்தம் செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்பட்டது. பணிக்கு வந்ததும் ஊழியர்கள் முதலாவதாக தங்கள் பணி இடங்களை சுத்தம் செய்தனர்.

சமூக இடைவெளிவிட்டு பணிகளை தொடங்கினார்கள். அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்படுகின்றன.

போல்ட், நட்டு, ராக்கெட்டுகளுக்கான உதிரி பாகங்கள், கார்கள் உள்பட மோட்டார் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கான இடு பொருட்கள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. புதிதாக பணிகள் வராததால், ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முந்தைய பணிகளை அவர்கள் செய்தனர்.

இதுகுறித்து தமிழக சிறுதொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தலைவர் டி.மூர்த்தி கூறியதாவது:-

அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நடவடிக்கைகளை நாங்கள் முழுமையாக பின்பற்றினோம். வரும் காலங்களிலும் அரசின் உத்தரவுகளை திறம்பட செயலாற்றுவோம். 63 நாட்களுக்கு பின்னர் தொழிற்பேட்டை இயங்க தொடங்கியிருக்கிறது. தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வர முடியாத சூழல் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் சுமார் 60 சதவீத நிறுவனங்கள் மட்டுமே திறக்கப்பட்டு, பணிகளை செய்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் இயங்கின. எனினும் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கவில்லை.

Next Story