டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் - 24 பெண்கள் கைது
டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 24 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம்,
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடை ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 60 நாட்களுக்கு பிறகு நேற்று பாண்டூர் டாஸ்மாக் கடையை திறந்த ஊழியர்கள் கடைக்கு வரும் மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை ஊழியர்கள் செய்து கொண்டிருந்தனர்.
விற்பனைக்கு தேவையான மதுபாட்டில்கள் குடோனில் இருந்து வருவதற்கு தாமதம் ஆனதால் விற்பனை தொடங்கப்படவில்லை, இது குறித்து தகவல் அறிந்த பாண்டூர் கிராமத்தை சேர்ந்த 24 பெண்கள் பாண்டூர் டாஸ்மாக் கடையை நோக்கி ஊர்வலமாக வந்து கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் தொடர்ந்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 24 பெண்களை கைது செய்து ஒரு வேனில் ஏற்றி மூலக்கழனி கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story