2 மாதங்களுக்கு பிறகு வண்டலூர் உட்கோட்டத்தில் 20 டாஸ்மாக் கடைகள் திறப்பு


2 மாதங்களுக்கு பிறகு வண்டலூர் உட்கோட்டத்தில் 20 டாஸ்மாக் கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 26 May 2020 5:15 AM IST (Updated: 26 May 2020 2:14 AM IST)
t-max-icont-min-icon

2 மாதங்களுக்கு பிறகு வண்டலூர் உட்கோட்டத்தில் 20 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

வண்டலூர், 

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் அன்று முதல் கடந்த 6-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படவில்லை, 7-ந் தேதி சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதியில் 20 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை,

இதனால் இந்த பகுதியை சேர்ந்த மது பிரியர்கள் திருப்போரூர், கொட்டமேடு போன்ற பகுதிகளுக்கு மது வாங்குவதற்கு சென்று கூட்ட நெரிசல் காரணமாக மதுபாட்டில்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 9-ந்தேதி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து கடந்த 16-ந்தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு புறநகர் பகுதிகளை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

அப்போதும் வண்டலூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படவில்லை. இதனால் மது பிரியர்கள் செங்கல்பட்டு அடுத்துள்ள மதுராந்தகம் பகுதிகளுக்கு நீண்ட தூரம் பயணம் செய்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

இந்தநிலையில் நேற்று வண்டலூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், செங்குன்றம், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள 20 டாஸ்மாக் கடைகள் 2 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் மதுபிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் அனைவரும் குடையுடன் சென்று டோக்கன் பெற்று சமூக இடைவெளியை ஒழுங்கான முறையில் கடைபிடித்து வரிசையில் நின்று பொறுப்புணர்ச்சியுடன் டாஸ்மாக் கடையில் இருந்து தங்களுக்கு பிடித்த மதுபாட்டில்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

வண்டலூர் காவல் உட்கோட்ட பகுதியில் ஒரே நாளில் 2 மாதங்களுக்கு பிறகு 20 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் கூட்டம் அதிகமாக கூடும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட கூடாது என்பதற்காக வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் 7 இன்ஸ்பெக்டர்கள், 23 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 200 போலீசார் டாஸ்மாக் கடைகளில் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆனால் வண்டலூர் காவல் உட்கோட்ட பகுதியில் திறக்கப்பட்ட 20 டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலான கடைகளில் போதிய அளவில் கூட்ட நெரிசல் காணப்படவில்லை.

இதனால் எந்தவிதமான தள்ளுமுள்ளும் இல்லாமல் அமைதியான முறையில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story