திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் வேலை செய்த வடமாநில தொழிலாளர்கள் 1,875 பேர் ரெயில்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் வேலை செய்த வடமாநிலங்களை சேர்ந்த 1,875 தொழிலாளர்கள், சிறப்பு ரெயில்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் நூற்பாலைகள், தனியார் நிறுவனங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் பீகார், ஒடிசா, மராட்டியம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்கின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிமாநில தொழிலாளர்கள் பாதிக் கப்பட்டனர். இதையடுத்து தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள், சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த 1,600 பேர் திண்டுக்கல்லில் இருந்து பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒடிசா, ஜார்கண்ட்
இந்தநிலையில் நேற்று ஒடிசா மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் சிறப்பு ரெயில் கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக மதுரையில் இருந்து ஜார்கண்டுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயில் மாலை 5 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தது. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 539 பேர், தேனி மாவட்டத்தில் இருந்து பஸ்களில் அழைத்துவரப்பட்ட 176 பேர் என மொத்தம் 715 பேர் ஜார்கண்ட் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதேபோல் இரவு 10 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து ஒடிசா மாநிலத்துக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு சென்றது. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 1,046 பேர் மற்றும் தேனி மாவட்டத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட 114 பேர் என 1,160 பேர் ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்மூலம் நேற்று ஒரே நாளில் ஒடிசா, ஜார்கண்டை சேர்ந்த 1,875 பேர் 2 சிறப்பு ரெயில்களில் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உணவு பொருட்கள்
முன்னதாக ரெயில்களில் புறப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 3 நாட்கள் ரெயில் பயணத்தின் போது அவர்கள் சாப்பிடுவதற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு உணவு பொருட் களை வழங்கினார். இதில் கலெக்டர் விஜயலட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், பரமசிவம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டு, வெளிமாநில தொழிலாளர்களை வழியனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story