டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்த மத்திய மந்திரி சதானந்தகவுடா நேராக வீட்டிற்கு சென்றதால் சர்ச்சை - தனிமைப்படுத்தி கொள்ளவில்லை என குற்றச்சாட்டு
டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்த மத்திய மந்திரி சதானந்தகவுடா நேராக வீட்டிற்கு சென்றதால் சர்ச்சை எழுந்து உள்ளது. விதிப்படி அவர் தனிமை கண்காணிப்பில் வைக்கப்படவில்லை என்பதால் பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெங்களூரு,
நாடு முழுவதும் நேற்று உள்நாட்டு விமான சேவை தொடங்கி உள்ளது. அதன்படி, சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்தன. அந்த விமானங்களில் வந்தவர்களை அதிகாரிகள் அழைத்து சென்று ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தனிமை கண்காணிப்பில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த பயணிகள் சிலர், ஓட்டலுக்கு செல்ல மாட்டோம் என்றும், தாங்களை 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியும் விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே டெல்லியில் இருந்து மற்ற பயணிகளுடன் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரியான சதானந்தகவுடா பெங்களூருவுக்கு விமானத்தில் வந்திருந்தார். அவருக்கு விமான நிலையத்தில் வைத்து பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் மத்திய மந்திரி சதானந்தகவுடா விமான நிலையத்தில் இருந்து காரில் ஏறி புறப்பட்டு தனது வீட்டுக்கு சென்றார்.
பயணிகள் எதிர்ப்பு
இதை பார்த்த மற்ற பயணிகள், மத்திய மந்திரியை மட்டும் தனிமைப்படுத்தாமல் வீட்டுக்கு அனுப்புவதா? என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்கள். அதோடு சதானந்தகவுடாவை தனிமைப்படுத் தாததற்கு மற்ற பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து மத்திய மந்திரி சதானந்தகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-
விதிமுறைகளில் விலக்கு
“மத்திய மந்திரியாக இருக்கும் நான் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன். பெங்களூரு விகாச சவுதாவில் அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் நடத்துவதற்காக டெல்லியில் இருந்து வந்துள்ளேன். கடந்த 63 நாட்களாக டெல்லியில் இருந்தேன். பெங்களூருவில் முக்கியமான கூட்டத்தில் மத்திய மந்திரியான நான் கலந்துகொள்ள இருப்பதால் சக பயணிகளுடன் விமானத்தில் வந்துள்ளேன். நான் ஒரு மத்திய மந்திரி என்பதால், கொரோனா தொடர்பான விதிமுறைகளில் எனக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே என்னை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை.
மத்திய மந்திரி என்பதால் நாடு முழுவதும் சென்று வருவதற்கு அனுமதி உள்ளது. நான் ஆரோக்கிய சேது செல்போன் செயலியை பயன்படுத்தி வருகிறேன். அந்த செயலியில் நான் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு தான், எனது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு வருகிறேன். டெல்லியில் இருந்தபோது 3 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனை முடிவில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. கொரோனா அறிகுறி இருந்தால் தனிமை முகாமுக்கு நானே சென்றுவிடுவேன். இந்த சம்பவத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story