மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது


மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 25 May 2020 11:37 PM GMT (Updated: 25 May 2020 11:37 PM GMT)

மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1000-ஐ தாண்டி உள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக கடந்த 4 நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. இந்தநிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 436 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52 ஆயிரத்து 667 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல மாநிலத்தில் புதிதாக 60 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1,695 ஆக அதிகரித்து உள்ளது.

மாநிலத்தில் மேலும் 1,186 பேர் கொரோனா நோய் பாதிப்பில் இருந்து குணமாகினர். இதுவரை 15 ஆயிரத்து 786 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். 35 ஆயிரத்து 178 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில் நேற்று 1,430 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நகரில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 972 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல நிதிதலைநகரில் புதிதாக 38 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தனர். இதனால் மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியது. இதுவரை நகரில் 1,026 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இவர்களில் 900-க்கும் அதிகமானவர்கள் 40 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். இதேபோல 8 ஆயிரத்து 404 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.

மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புகுறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி - 2,739 (38 பேர் பலி), தானே புறநகர் - 457 (4), நவிமும்பை மாநகராட்சி - 2,068 (32), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 941 (8), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 180 (3), பிவண்டி மாநகராட்சி - 98 (3), மிரா பயந்தர் மாநகராட்சி - 475 (5), வசாய் விரார் மாநகராட்சி - 597 (15), ராய்காட் - 431 (5),

பன்வெல் மாநகராட்சி - 360 (12). மாலேகாவ் மாநகராட்சி - 721 (44). புனே மாநகராட்சி - 5,319 (260), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 317 (7), சோலாப்பூர் மாநகராட்சி - 599 (40), அவுரங்காபாத் மண்டலம்- 1,508 (49), நாக்பூர் மாநகராட்சி - 468 (7).

Next Story