மும்பை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான போக்குவரத்து - தமிழகத்துக்கு சேவை இல்லை
மும்பை விமான நிலையத்தில் நேற்று உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியது. மும்பையில் இருந்து தமிழகத்துக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை.
மும்பை,
மும்பை விமான நிலையம் நாட்டிலேயே பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும். கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று மும்பை உள்பட நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. இதையொட்டி நேற்று நள்ளிரவுக்கு பிறகு பயணிகள் விமான நிலையம் வரத்தொடங்கினர்.
பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க விமான நிலையத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. லிப்டு, இருக்கைகளில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் அடையாளங்கள் போடப்பட்டு இருந்தன. பயணிகள் முககவசம் அணிந்தே வந்திருந்தனர். ஒரு பயணி டாக்டர்கள் அணிவது போல பாதுகாப்பு உடையை (பி.பி.டி.கிட்) அணிந்து வந்தார். இதேபோல விமான நிறுவனங்கள் சார்பில் பயணிகளுக்கு முககவசங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
பயணிகள் அவதி
தற்போது மும்பை விமான நிலையத்தில் இருந்து 25 விமானங்கள் புறப்படவும், 25 விமானங்கள் வந்து இறங்கவும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே நேற்று மும்பையில் இருந்து செல்ல இருந்த சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், ‘‘நான் அதிகாலையில் எழுந்து விமான நிலையம் வந்தேன். இங்கு வந்த பிறகு தான் நான் டெல்லி செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக கூறினர். மேலும் டிக்கெட் பணம் திருப்பி தருவது பற்றியும், மாற்று டிக்கெட் தருவது பற்றியும் இதுவரை எந்த தகவலையும் விமான நிறுவனம் அறிவிக்கவில்லை’’ என்றார்.
தமிழகத்துக்கு சேவை இல்லை
இதேபோல நாட்டின் பிற பகுதிகளில் மும்பை வந்து இறங்கிய பயணிகளுக்கு மாநில அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. குறிப்பாக அனைத்து பயணிகளும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அவர்களின் கையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்ட பின்தான் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது மும்பையில் இருந்து கொச்சி, டெல்லி, கோழிக்கோடு, டையு, சண்டிகர், நாக்பூர், வாரணாசி, லக்னோ, ஜெய்ப்பூர், பெங்களூர், ஐதராபாத், பாட்னா, அலகாபாத், கோரக்பூர் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை உள்பட எந்த பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்படவில்லை.
Related Tags :
Next Story