மராட்டிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு தொகுப்பு; பா.ஜனதா கோரிக்கையை உத்தவ் தாக்கரே நிராகரித்தார்


மராட்டிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு தொகுப்பு; பா.ஜனதா கோரிக்கையை உத்தவ் தாக்கரே நிராகரித்தார்
x
தினத்தந்தி 26 May 2020 5:55 AM IST (Updated: 26 May 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்ற பாரதீய ஜனதாவின் கோரிக்கையை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நிராகரித்தார்.

மும்பை, 

நாட்டில் கொரோனா ஊரடங்கால் கடுமையாக வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு தொகுப்பை அறிவித்தார். இதேபோல மராட்டியத்திலும் சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக மாநில அரசு சிறப்பு தொகுப்பை அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வலியுறுத்தியது.

இது தொடர்பாக நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆன்லைன் மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டின் பொருளாதாரத்தை மீட்க முன்னதாக பல லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டது. அந்த சிறப்பு தொகுப்பால் மிக சிறிய அளவு தான் தாக்கம் காணப்படுகிறது.

எனவே மராட்டியத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பு தொகுப்பு தேவையில்லை.

ரூ.85 கோடி டிக்கெட் கட்டணம்

மராட்டியத்தில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை நாங்கள் நன்கு கவனித்து வருகிறோம். அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கான டிக்கெட் கட்டணமும் ஏற்கப்பட்டுள்ளது. அவர்கள் 481 சிறப்பு ரெயில்களில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 85 சதவீத தொகை மத்திய அரசு தர தாமதப்படுத்தினாலும் மாநில அரசு ரூ.85 கோடிக்கு மேல் டிக்கெட்டிற்காக செலவிட்டுள்ளது. ஒரு நாளைக்கு 80 சிறப்பு ரெயில்களை இயக்க கோரினோம். ஆனால் 30 முதல் 40 ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. 3 லட்சத்து 80 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களின் எல்லைகள் வரை அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மூலம் கொண்டு விடப்பட்டுள்ளனர்.

இதுதவிர சுமார் 5 லட்சம் முதல் 6 லட்சம் தொழிலாளர்களுக்கு தங்குமிடம், காலை மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது.

இதுவரை 70 ஆயிரம் தொழில் நடவடிக்கைகளை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் 6 லட்சம் தொழிலாளர்களுடன் செயல்பட தொடங்கி உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story