ஊரடங்கால் விலை வீழ்ச்சி: வீணாக குப்பையில் கொட்டப்படும் சுகுனி காய்கள் விவசாயிகள் வேதனை


ஊரடங்கால் விலை வீழ்ச்சி:  வீணாக குப்பையில் கொட்டப்படும் சுகுனி காய்கள்  விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 26 May 2020 7:17 AM IST (Updated: 26 May 2020 7:17 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால், சுகுனி காய்கள் வீணாக குப்பையில் கொட்டப்படுகின்றன. மேலும் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் இங்கிலீஷ் காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், முள்ளங்கி, பீன்ஸ், டர்னீப் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சைனீஸ் காய்கறிகளான சுகுனி, கேபேஜ், புரூக்கோலி, ஐஸ்பெர்க் போன்றவற்றையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்த காய்கறிகள் மருத்துவ குணங்கள் உடையதோடு, சூப் வைக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. நல்ல விலை கிடைத்ததால், பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.

ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் சைனீஸ் காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. அறுவடைக்கு பின்னர் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும், சென்னை, திருச்சி, கோவை போன்ற வெளிமாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பெரிய ஓட்டல்களில் சூப்புக்காக சைனீஸ் காய்கறிகளை மொத்தமாக ஆர்டர் செய்வது உண்டு.

விலை வீழ்ச்சி

இதற்கிடையே ஊரடங்கு உத்தரவால் பொது போக்குவரத்து முடங்கி போய் உள்ளது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல தடை இல்லை என்றாலும், அதிக வாடகைக்கு சரக்கு வாகனங்களை அமர்த்தி காய்கறிகளை விவசாயிகளால் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஊரடங்குக்கு முன்பு ஒரு கிலோ சுகுனி ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை ஆனது. தற்போது ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை ஆகிறது. ஊட்டி அருகே மைனலை கிராமத்தில் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் விளைந்த சுகுனி காய்களை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு உள்ளனர். சிலர் அறுவடை செய்து வீணாக குப்பையில் கொட்டி வருகின்றனர். இந்த நிலையால் விவசாயிகள் வேதனையில் இருக்கின்றனர்.

நஷ்டம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஊட்டியில் விளையும் சைனீஸ் காய்கறிகளுக்கு தனி மவுசு உள்ளது. ஊரடங்கால் மொத்த வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்ய வரவில்லை. வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியாததாலும், விலை வீழ்ச்சியாலும் அறுவடை செய்யாமல் விட்டு உள்ளோம். விற்றாலும் தொழிலாளர்களின் சம்பளத்துக்கு கூட கட்டுப்படி ஆகவில்லை. சமவெளி பகுதிகளில் விளையும் வெள்ளரிக்காய்களுக்கு பதிலாக சுகுனி காய்களை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. விலை வீழ்ச்சியால் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story