நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு மருந்து வழங்க 2 ரோபோக்கள் அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு மருந்து, உணவு வழங்க 2 ரோபோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை,
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு மருந்து, உணவு வழங்க 2 ரோபோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவற்றை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று தொடங்கி வைத்தார்.
ரோபோக்கள்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பயன்படுத்த 2 ரோபோக்கள் (தானியங்கி எந்திரங்கள்) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா ஆஸ்பத்திரியில் நேற்று நடந்தது. தமிழக ஆதி திராவிடர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கி, ரோபோக்கள் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார்.
அப்போது அமைச்சர் ராஜலட்சுமி, நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
பின்னர் அமைச்சர் ராஜலட்சுமி கூறியதாவது:-
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 192 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகமும், திருச்சி ப்ரொபெல்லர் டெக்னாலஜி என்கிற அமைப்பும் சேர்ந்து 3.2 கிலோ எடை உடைய ரோபோக்களை தயார் செய்துள்ளது.
கொரோனா நோயாளிகள்
இந்த ரோபோக்கள் கொரோனா நோயாளிகள் அருகில் சென்று மருந்து பொருட்கள், உணவுகள் வழங்கும். தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சென்னை, திருச்சி, தஞ்சை, தேனி மற்றும் மதுரை ஆகிய மருத்துவ கல்லூரிகளுக்கு ரோபோக்களை வழங்கியுள்ளது.
தற்போது இந்த சேவை நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் தொடங்கப்பட்டு உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு டாக்டர்கள், செவிலியர்கள் சென்று செய்யும் மருத்துவ பணிகளை இந்த ரோபோக்கள் செய்யும். இதனால் அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., நெல்லை ஆவின் தலைவர் சுதா பரமசிவன், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராம், பாளையங்கோட்டை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story