பவித்திரத்தில் ரூ.1¾ கோடியில் தடுப்பணை பணி


பவித்திரத்தில் ரூ.1¾ கோடியில் தடுப்பணை பணி
x
தினத்தந்தி 26 May 2020 7:58 AM IST (Updated: 26 May 2020 7:58 AM IST)
t-max-icont-min-icon

பவித்திரத்தில் ரூ.1¾ கோடியில் தடுப்பணை பணிகளை கலெக்டர் மெகராஜ் தொடங்கி வைத்தார்.

எருமப்பட்டி,

கொல்லிமலை தெற்கு பகுதியின் அடிவாரத்தில் உள்ள பவித்திரம் ஏரி மற்றும் மகாதேவி ஏரிகளுக்கு நீர் வழங்க தனித்தனியாக அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த 2017-ம் ஆண்டு கொல்லிமலையில் பெய்த கனமழையால் பெரியாறு மற்றும் குருவச்சியாறுகளில் பெரும் வெள்ளம் வந்தது.

இதனால் பவித்திரம் ஏரிக்கு நீர் வழங்கும் பிரிவு அணைக்கட்டானது சேதமடைந்து. பவித்திரம் ஏரிக்கு வரும் வரத்து வாய்க்காலில் இருகரைகளை உடைத்தும், ஆறு பல இடங்களில் மண்ணால் மூடியும், பல இடங்களில் கரை அரித்தும், ஆற்றின் உச்ச நீர்மட்டத்திற்கு மேல் வெள்ளம் வந்ததால், பல ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தது.

இதையடுத்து சேதமடைந்த பவித்திரம் ஏரிக்கு நீர் வரும் தடுப்பணை பகுதியில் புதிய தடுப்பணை அமைக்கவும், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிரந்தர தடுப்புச்சுவர் அமைப்பதற்காகவும் முதல்-அமைச்சர் 2020- 2021-ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1.76 கோடி ஒதுக்கியுள்ளார். இதையடுத்து 15 மீட்டர் நீளத்திற்கு தடுப்பணையும், ஆறுகளில் 10 இடங்களில் 384 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவரும் அமைக்கப்படவுள்ளது.

இப்பணியினை சேந்த மங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் மெகராஜ் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவிப்பொறியாளர் யுவராஜ், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் வரதராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், முனியப்பன், பவித்திரம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், மாவட்ட கவுன்சிலர் தவமணி சுகுமார், எருமப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலுசாமி, ஒப்பந்ததாரர் அசோக்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story