கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகளுடன் நெல்லையில் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் மையம் கலெக்டர் ஷில்பா ஆய்வு
நெல்லையில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகளுடன் அமைக்கப்பட்டு உள்ள பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார்.
நெல்லை,
நெல்லையில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகளுடன் அமைக்கப்பட்டு உள்ள பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார்.
விடைத்தாள் திருத்தும் பணி
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி, 24-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதி நாள் தேர்வை சுமார் 34 ஆயிரம் பேர் எழுத முடியாமல் போனதாக தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அந்த தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 18-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நாளை (புதன்கிழமை) மாநிலம் முழுவதும் தொடங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது.
7 மையங்கள்
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இக்னேஷியஸ் கான்வென்ட், பெல் மெட்ரிக்குலேசன் பள்ளி, ரோஸ்மேரி மேல்நிலைப்பள்ளி, கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி, மகராஜநகர் ஜெயேந்திரா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது.
ஒரு அறைக்கு தலைமை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், உதவி தேர்வாளர்கள் என மொத்தம் 8 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ஆசிரியர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 1,000 ஆசிரியர்களை ஈடுபடுத்த நெல்லை மாவட்ட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தை நேற்று ஆய்வு செய்தார். அங்கு ஆசிரியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி ராஜேந்திரன், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story