திருச்சி ஜி-கார்னர் மார்க்கெட்டில் மழைநீரில் மிதந்த காய்கறிகள்
திருச்சி ஜி-கார்னர் மார்க்கெட்டில் மழைநீரில் காய்கறிகள் மிதந்தன.
திருச்சி,
திருச்சி ஜி-கார்னர் மார்க்கெட்டில் மழைநீரில் காய்கறிகள் மிதந்தன.
கோடை மழை
திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆண்டு தோறும் பெய்யக்கூடிய கோடை மழையானது திருச்சியில் தலைகாட்டாமல் இருந்து வந்தது. திருச்சியில் நேற்று முன்தினம் வெயிலின் உச்சம் 108 டிகிரியை தாண்டியது. பகலில் அனலால் தவித்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இரவு 10 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்களும், மரக்கிளைகளும் ஒடிந்து விழுந்தன. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மரக்கிளைகள் மின்கம்பியில் விழுந்து திருச்சி கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு 1 மணிவரை மின்சாரம் வராமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
தண்ணீரில் மிதந்த காய்கறிகள்
திருச்சி பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் உள்ள ரெயில்வே திடலில் காந்தி மார்க்கெட்டில் இயங்கி வந்த மொத்த காய்கறி மற்றும் சில்லரை காய்கறி வியாபாரம் திறந்தவெளியில் தற்காலிகமாக இரவு நேரத்தில் மட்டும் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகளில் வந்த காய்கறிகள் விற்பனைக்காக இறக்கப்பட்டன. சில்லரை வியாபாரிகள் வெண்டைக்காய், கத்தரிக் காய், தக்காளி, புடலங்காய், பீட்ரூட், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை தரையில் கோணிப்பையை விரித்து வியாபாரம் செய்தனர். இரவு 10 மணிக்கு திடீரென்று மழை கொட்டியது. இதனால், மழைநீரில் காய்கறிகள் மிதக்க தொடங்கின. அதோடு மட்டுமல்லாது வியாபாரிகள், அதை வாங்க வந்த நுகர்வோர் என அனைவருமே ஒதுங்ககூட இடம் இல்லாமல் மழையில் நனைந்து தவித்தனர்.
வியாபாரிகள் கோரிக்கை
மழையால் ஜி-கார்னர் திடல் சேறும் சகதியுமாக மாறியதால் காய்கறி வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதுபற்றி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் கூறும் போது, ‘ஏற்கனவே மூடப்பட்ட காந்திமார்க்கெட்டை திறந்து சில்லரை விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தோம். இதுவரை அதற்கு பதில் இல்லை. தற்போது மழை பெய்து காய்கறிகள் தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, ஜூன் 1-ந் தேதி முதல் மீண்டும் காந்தி மார்க்கெட்டை திறந்து, அங்கு அனைவரும் வியாபாரம் செய்திட அனுமதிக்க வேண்டும்’ என்றார்.
திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
கோவில்பட்டி-25.40, திருச்சி ஜங்ஷன்-24.80, மருங்காபுரி-23.20, திருச்சி டவுன்-20, பொன்னையார் டேம்-14.20, மணப்பாறை-5.40, திருச்சி ஏர்போர்ட்-5.40, தா.பேட்டை-8.
Related Tags :
Next Story