மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு 881 தொழிலாளர்கள் பயணம்
மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு 881 தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.
மதுரை,
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி வந்த வெளிமாநில தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கினால் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு உணவு, சம்பளம் போன்றவை சரிவர வழங்க முடியவில்லை. எனவே அந்த தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி போராட்டமும் நடத்தினர். அதை தொடர்ந்து தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி கடந்த 18-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மதுரையில் இருந்து உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம் என வடமாநிலத்திற்கு சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள்
இந்த நிலையில் மதுரையில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு நேற்று சிறப்பு ரெயில் புறப்பட்டு சென்றது. அதில் மதுரை மாவட்டத்தில் இருந்து 181 பேர், ராமநாதபுரத்தில் இருந்து 174 பேர், சிவகங்கையில் இருந்து 57 பேர், விருதுநகரில் இருந்து 212 பேர், தூத்துக்குடியில் இருந்து 257 பேர் என மொத்தம் 881 பேர் மதுரையில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்கள் அனைவரும் பல்வேறு ஊர்களில் இருந்து அரசு பஸ்கள் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
மதுரை ரெயில் நிலையம் முன்பு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கி, சமூக இடைவெளியுடன் அவர்கள் உரிய இடத்தில் அமர வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு ரெயில் மதியம் 3.45 மணிக்கு மதுரையில் இருந்து கிளம்பி சென்றது.
Related Tags :
Next Story