கொரோனா பரவலை தடுக்க 5 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு காமராஜர் பல்கலைக்கழகம் ஏற்பாடு
கொரோனா குறித்து கல்லூரி மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காமராஜர் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
மதுரை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்ற கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நேற்று தொடங்கியது. கலெக்டர் வினய் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன், பெரிய ஆஸ்பத்திரி டீன் சங்குமணி, மன நல மருத்துவர் ராமசுப்பிரமணியன், பேராசிரியர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் உதயகுமார் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சமுதாய பங்களிப்பு என்ற வகையில் மாணவர்களை கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். எனவே முதலில் அவர்களை தயார்படுத்தும் பணியில் காணொலி காட்சி மூலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் செல்லமுத்து அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.
5 ஆயிரம் மாணவர்கள்
மதுரை மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் மாணவர்கள் ஈடுபட உள்ளனர். அவர்கள் கொரோனா பரவுதலை தடுப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். முதல் கட்டமாக 552 மாணவ- மாணவிகளுக்கு தலை சிறந்த பேராசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கொரோனா நோய் குறித்து மாணவர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவ வல்லுனர்கள் மாணவர்களிடம் எடுத்துரைப்பார்கள். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்று வழங்கப்படும். சான்று பெற்ற மாணவர்கள் கொரோனா வைரஸ் பற்றி முழுமையான புரிதலோடு இருப்பார்கள். சமூக இடைவெளி, கை கழுவும் பழக்கம், கிருமி நாசினி தெளித்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மக்களுக்கு எடுத்துரைப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story