பாகனை சுவரில் அடித்துக் கொன்ற திருப்பரங்குன்றம் கோவில் யானை வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறதா? அதிகாரி விளக்கம்
பாகனை சுவரில் அடித்துக் கொன்ற திருப்பரங்குன்றம் கோவில் யானை, வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து கோவில் அதிகாரி விளக்கம் அளித்தார்.
திருப்பரங்குன்றம்,
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ‘தெய்வானை’ என்ற பெயர் கொண்ட பெண் யானை உள்ளது. இந்த யானையை பாகன்களான மதுரை திடீர் நகரை சேர்ந்த காளி என்ற காளஸ்வரன் (வயது 38), திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ராஜேஷ் (30) ஆகியோர் பராமரித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் குளிக்க வைப்பதற்காக பாகன் காளஸ்வரன் யானையை தண்ணீர் தொட்டிக்கு அழைத்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று ஆவேசம் அடைந்த அந்த யானை தும்பிக்கையால் காளஸ்வரனை தூக்கி கோவில் சுவரில் அடித்தது. இதில் காயம் அடைந்த காளஸ்வரன் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் திருப்பரங்குன்றம், மதுரை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவ குழுவினர் பரிசோதனை
இந்த நிலையில் நேற்று 3 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழுவினர் யானையை பரிசோதனை செய்தனர். மேலும் பாசிப்பயிறு, சுண்டல் பயிறு, தர்ப்பூசணி பழம், கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை வழங்கினர். அதை யானை விரும்பி சாப்பிட்டது.
கோவிலுக்குள் யானை வழக்கமாக தங்கும் மண்டபத்துக்கு கொன்டு செல்லப்படவில்லை. மாறாக டாக்டர் குழுவினர் ஆலோசனைப்படி காற்றோட்டமான சஷ்டி மண்டப வளாகம் சார்ந்த வெளிபிரகாரத்தில் தங்க வைக்கப்பட்டது. மேலும் அங்கு தங்கி இருந்து டாக்டர் குழுவினர் தொடர்ந்து அதனை கண்கானித்து வருகின்றனர்.
தன்னை பாதுகாத்து பராமரித்து வந்த பாகனை ஆக்ரோஷமாக தாக்கி யானை கொன்றதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதே நேரத்தில் அந்த யானையை வனப்பகுதிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
அதிகாரி விளக்கம்
இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கோவில் யானை தெய்வானை, கால்நடை டாக்டர் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது யானை சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. வனத்துறை அதிகாரிகளும் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
வனப்பகுதிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாக கால்நடை டாக்டர் குழு மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். அதுதொடர்பான விவரங்கள் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மூலம் அரசுக்கு அனுப்பப்படும். அரசு எடுக்கும் முடிவை செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வு
இதற்கிடையே திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்து இந்து சமய மதுரை மண்டல இணை ஆணையர் நடராஜன் ஆய்வு செய்தார். அப்போது கோவிலுக்குள்ளும், கோவில் வெளிப்பிரகாரத்திலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமரா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 2 கட்டங்களாக 40 கண்காணிப்பு கேமரா பொருத்தினீர்களே? அவை எங்கே? என்று கேள்விகளை எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அனைத்து இடங்களிலும் உடனடியாக கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று யானை நிறுத்துமிடம் உள்பட கோவிலின் பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்தது.
பலியான பாகன் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை?
யானை தெய்வானை தாக்கியதில் பலியான துணை பாகனான காளஸ்வரனுக்கு ரேவதி என்ற மனைவியும் 3 வயதில் யோகிதாஸ் ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். யானைக்கும் பாகனுக்கும் இன்சூரன்ஸ் (காப்பீட்டு தொகை) போடப்பட்டுள்ளதால் பாகன் குடும்பத்தினருக்கு உரிய பணபலன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் காளஸ்வரன் குடும்பத்திற்கு அரசு நிதி வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கோவிலில் அரசு பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story