மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு


மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக  வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 26 May 2020 10:31 AM IST (Updated: 26 May 2020 11:33 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி, 

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகரம் உள்ளிட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் வினாடிக்கு 72 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. கோடை காலம் என்பதால் மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடிநீர் உறைகிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

இந்த உறைகிணறுகளின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற அரசு வைகை ஆற்றில் உறைகிணறுகளின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.

1,500 கன அடி வீதம்

அதன்படி வைகை அணையில் இருந்து நேற்று மாலை 6 மணியளவில் வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 41.88 அடியாக இருந்தது. அணையில் இருந்து வைகை நுண்புனல் நீர்மின் நிலையம் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் வைகை ஆற்றின் வழியாக சீறிப்பாய்ந்து சென்றது. தொடர்ந்து 3 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) வினாடிக்கு 850 கன அடி வீதமும், நாளை வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. நாளை மறுநாள் மாலை 6 மணியுடன் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட உள்ளது.

Next Story