17 மாவட்டங்களை சேர்ந்த 1,388 பேர், மும்பையில் இருந்து ரெயிலில் விழுப்புரம் வந்தனர்


17 மாவட்டங்களை சேர்ந்த 1,388 பேர், மும்பையில் இருந்து ரெயிலில் விழுப்புரம் வந்தனர்
x
தினத்தந்தி 26 May 2020 10:37 AM IST (Updated: 26 May 2020 10:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் 17 மாவட்டங்களை சேர்ந்த 1,388 பேர் மும்பையில் இருந்து சிறப்பு ரெயிலில் விழுப்புரம் வந்தனர்.

விழுப்புரம்,

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மும்பையின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் இவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வர முடியாமல் அங்கேயே சிக்கி தவித்தனர். மேலும் இவர்கள் வேலையை இழந்து பசியும், பட்டினியுமாக கிடந்ததால் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு மத்திய அரசு, ஊரடங்கில் இருந்து தளர்வு வழங்கியதை தொடர்ந்து மும்பையில் தவித்த தமிழர்களை, சொந்த ஊருக்கு சிறப்பு ரெயிலில் அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்தது.

அதன்படி கடந்த 23-ந் தேதி இரவு 11.15 மணிக்கு மும்பை லோக்மானியதிலக் பகுதியில் இருந்து திருநெல்வேலிக்கு 1,600 தொழிலாளர்களுடன் சிறப்பு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.

இந்த ரெயிலில் இருந்து சென்னையை சேர்ந்த 332 பேர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 167 பேர், கள்ளக்குறிச்சியை சேர்ந்த 561 பேர், திருவண்ணாமலையை சேர்ந்த 210 பேர், கடலூரை சேர்ந்த 38 பேர், சேலத்தை சேர்ந்த 25 பேர், வேலூரை சேர்ந்த 18 பேர், கிருஷ்ணகிரியை சேர்ந்த 9 பேர், திருச்சியை சேர்ந்த 6 பேர், தர்மபுரியை சேர்ந்த 6 பேர், காஞ்சீபுரத்தை சேர்ந்த 3 பேர், கோவையை சேர்ந்த 3 பேர், திண்டுக்கல்லை சேர்ந்த 3 பேர், அரியலூரை சேர்ந்த 3 பேர், மயிலாடுதுறையை சேர்ந்த 2 பேர், பெரம்பலூரை சேர்ந்த ஒருவர், செங்கல்பட்டை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 1,388 பேர் விழுப்புரம் வந்திறங்கினர்.

இவர்கள் அனைவரையும் விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், கோட்டாட்சியர் ராஜேந்திரன், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் தாசில்தார் கணேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் அவர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு 47 சிறப்பு பஸ்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் அனைவரும், அவரவர் சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 167 பேரும் அரசு பஸ்கள் மூலம் விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம், கப்பியாம்புலியூர், அரசூர், அரகண்டநல்லூர், விக்கிரவாண்டி, ஒரத்தூர், மயிலம், திண்டிவனம், சாரம், புளிச்சப்பள்ளம் ஆகிய இடங்களில் உள்ள அரசு, தனியார் பள்ளி- கல்லூரி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தனிமைப்படுத்தப்பட்டனர். ஏற்கனவே சென்னையில் கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விழுப்புரம் வந்திறங்கிய சென்னை பகுதியை சேர்ந்த 332 பேரையும், சென்னைக்கு அனுப்பி வைக்காமல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேற்கண்ட தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் மருத்துவ குழுவினர், கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் 14 நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அதுபோல் விழுப்புரத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களையும் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு பணி முடிந்த பிறகே வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் 1,388 தொழிலாளர்களை இறக்கி விட்ட பின்னர் அந்த ரெயில் நள்ளிரவு 12.45 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு புறப்பட்டுச்சென்றது.

Next Story