கொரோனா தாக்கத்தால் வேலையிழந்த சமையல் கலைஞர்கள்


கொரோனா தாக்கத்தால் வேலையிழந்த சமையல் கலைஞர்கள்
x
தினத்தந்தி 26 May 2020 10:38 AM IST (Updated: 26 May 2020 10:38 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தாக்கத்தால் வேலையிழந்த சமையல் கலைஞர்கள்

அறந்தாங்கி, 

கொரோனா தாக்கத்தால் சமையல் கலைஞர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

சமையல் கலைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அரசர்குளம், ஆயிங்குடி, நாகுடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான சமையல் கலைஞர்கள் உள்ளனர். இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களுக்கும் சமையல் வேலைக்கு சென்று வருவார்கள்.

இந்த மாதங்களில் அனைத்து சமுதாய மக்களின் சார்பிலும் திருமணம், காதணிவிழா, மொய் விருந்து உள்ளிட்ட பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சமையல் கலைஞர்களுக்கு வைகாசி மாதம் சீசன் மாதம் ஆகும். முன்கூட்டியே பதிவு செய்தால்தான் அவர்கள், விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு நேரம் ஒதுக்கி தருவார்கள். அவ்வாறு பரபரப்பாக காணப்படும் சமையல் கலைஞர்கள் தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இன்றி தவித்து வருகின்றனர்.

நிவாரணம்

சைவம், அசைவம் என விருந்துகளில் அசத்தும் இவர்களின் நிலைமை தற்போது, மிகவும் மோசமாக உள்ளது. இது குறித்து ஆயிங்குடியை சேர்ந்த சமையல் கலைஞர் சுப்பிரமணியன் என்பவர் கூறியதாவது:-

நான் கடந்த 20 வருடங்களாக சமையல் தொழில் செய்து வருகிறேன். அறந்தாங்கி சுற்று வட்டார பகுதி மட்டும் இல்லாமல் வெளிமாவட்டங்களுக்கும் சென்று நிகழ்ச்சிகளுக்கு சைவம், அசைவம் என அனைத்து விதமான சாப்பாடுகளையும் செய்து கொடுத்து வருமானம் பார்த்து வந்தோம். சமையலுக்கு உதவி செய்யவும், விருந்து உபசரிக்கவும் ஆண்,பெண் என 20 பேர் கொண்ட குழுவாக இருந்து வருகிறோம். தற்போது வைகாசி மாதம் என்பதால் இந்த மாதத்தில் தான் அதிகமான சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் ஊரடங்கால் இந்த மாதத்தில் எங்களுக்கு எந்த வேலையும் இல்லாததால் சமையல் கலைஞர்கள் அனைவரும் வருமானம் இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

Next Story